Cinema History
மொத்த யூனிட்டும் எதிர்ப்பு… விடாப்பிடியாக இருந்த பாலசந்தர்… சாதித்துக் காட்டிய வைரமுத்து!
இயக்குனர் சிகரம் பாலசந்தர் எப்போதுமே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவருக்குப் பிடித்த வரிகள் வரும் வரைக்கும் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என யாராக இருந்தாலும் விட மாட்டார். வாலி ஒருமுறை சொல்கிறார். பாட்டு எழுதி பாலசந்தரிடம் கொடுத்தாராம். கவிஞரே ரொம்ப சிறப்பா எழுதிருக்கீங்க. ஆனால் இந்தப் பல்லவியில் 3வது வரியை மட்டும் மாத்துங்க. இந்தப் பாட்டு எங்கேயோ போயிடும்னு சொல்வாராம்.
இவரும் கடகடன்னு மாத்தி எழுதுவாராம். மாத்துன உடனே பார்த்தீங்களா இப்ப இந்தப் பாட்டு எப்படி இருக்கு பார்த்தீங்களளா? சரி. இப்ப இந்த வரிக்கு இணையா முதல் வரியை மாத்திக் கொடுங்களேன். மாத்திட்டா பாட்டு இன்னும் சிறப்பா இருக்குமே என்பாராம். சரின்னு முதல்வரியை மாத்துவாராம். அப்புறம் இந்தப் பாட்டுல கடைசி வரிக்கு முதல் வரி இருக்குப் பார்த்தீங்களா… அதை மாத்திட்டா மொத்தப்பாட்டும் சிறப்பாயிடும்னு சொல்வாராம்.
அதையும் மாத்திடுவாராம் வாலி. அப்படின்னு சொல்லிச் சொல்லி எல்லா வரிகளையும் மாத்திடுறது. அப்போ வாலி கேட்பாராம் கிண்டலாக கொஞ்சம் கோபத்துல. மேல பிள்ளையார் சுழி போட்டுருக்கேனே. அது இருக்கட்டுமா…ன்னு. அது இருக்கட்டும். அதை மாத்த வேண்டாம்னு சொல்வாராம். அந்த அளவுக்கு தனக்கு வேண்டிய வரிகளை நோகாம வாங்கக்கூடியவர் பாலசந்தர்.
1985ல கர்நாடக சங்கீதம் சம்பந்தமான சிந்து பைரவி படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துல அவருடன் முதன்முதலா இசைஞானி இளையராஜா இணைகிறார். பாடலாசிரியர் வைரமுத்து எழுத வாய்ப்பு கொடுக்கிறார். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் கடைசி வரை வைரமுத்து தான் சரியான ஆள் என அவரையே எழுத வைக்கிறார். ஒரு பாட்டுக்கு மறுபடியும் எதிர்ப்பு கிளம்புது.
இந்தப் பாட்டை இவரால எழுத முடியாது. வாலிக்கிட்டத் தான் கொடுக்கணும்னு எழுத்தாளர் பாலகுமாரன் உள்பட பலரும் சொல்றாங்க. ஏன்னா அது ஒரு கிரிட்டிகலான சூழல். பாரதி ஸ்டைல்ல எழுதணும்.
கதாநாயகன் பெரிய பாடகன். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அப்ப ஒரு ரசிகையைப் பார்க்கிறான். அப்போ இவனுக்கு அவள் மேல் காதல் வருது. காதல் காமமா மாறுது. இது தப்புன்னு அவனுக்குத் தெரியுது. இந்தக் காமம் தேவையில்லாதது. இதை நிறுத்தணும். வாழ்க்கையைத் தொலைச்சிடும்னு நினைச்சிக் கோபத்துல பாடுறான். இந்த சூழலைக் கவிஞரிடம் சொல்கிறார் பாலசந்தர். இந்தப் பாடலில் பாரதியின் டச் வேணும். மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடுன்னு மகாகவி பாரதி பாடியிருப்பார்.
வைரமுத்துவுக்கோ இந்தப் பாடல் ஒரு சவால். ஏன்னா பாரதி டச்சும் இருக்கணும். அதுல நம்மோட டச்சும் இருக்கணும். உடனே எழுதிக் கொண்டு போய் பாலசந்தரிடம் கொடுக்கிறார். படித்ததும் அவருக்குப் மிகப் பெரிய மகிழ்ச்சி.
ரொம்ப நன்றி கவிஞரே. நான் நினைச்சதை விட சிறப்பா எழுதிட்டீங்க. இந்தப் பாட்டை யூனிட்டே எதிர்த்த போதும் உங்கக் கிட்ட கொடுத்தேன். அதை சிறப்பா செஞ்சிருக்கீங்க என்றார். அதுதான் மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் என்ற பாடல். இதில் கவிஞரின் டச்சும், பாரதியின் டச்சும் இருந்தது. பாடியவர் கே.ஜே.யேசுதாஸ்.