Connect with us

Cinema History

வறுமை தாங்காமல் சிறுவயதில் மாடு மேய்த்த நகைச்சுவை நடிகர் இவர் தான்…!

நகைச்சுவை நடிகர் தங்கவேலு தனக்கென தனி பாணியை வைத்து தமிழ்த்திரை உலகில் முத்திரை பதித்தவர். வசனம், முகபாவம் இவை தான் இவரது அடையாளங்கள். இவர் சிரிக்க மாட்டார். ஆனால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

கல்யாணப்பரிசு, திருடாதே, கைதி கண்ணாயிரம் போன்ற படங்களில் இவர் நடித்த காட்சிகளைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

50களில் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் தங்கவேலுவின் காமெடி என்றால் சக்கை போடு போடும். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் நடிக்காத காமெடியா என்று கேட்பார்களாம் ரசிகர்கள். அந்த அளவு அவர் படங்களில் தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார்.

Thangavelu

நாடகத்துறையிலும் அவர் பங்கு அளப்பரியது. கலைவாணர் என்எஸ்கே. தான் இவருடைய குரு. இவரது நகைச்சுவையில் யதார்த்தமே அதிகம் இருக்கும். இதுவே இவரது பாணியானது.

பொதுவாகவே நகைச்சுவை நடிகர்களின் சொந்த வாழ்க்கை சோகமயமானதாகத் தான் இருக்கும். அவர்கள் நம்மைப் போல் மற்றவர்கள் சோகத்தில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள்.

காரைக்காலில் 1917ம் ஆண்டு அருணாசல ஆசாரி, தருமம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையோ மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தாய்க்குத் தான் குடும்பப் பொறுப்பு இருந்தது. தங்கவேலு மொத்தமே 15 நாள்கள் தான் பள்ளிக்கூடமே போயிருக்கிறார். அதற்கு மேல் அவரால் போகமுடியவில்லை. காரணம் அவரது தந்தை தான். 6வது வயதில் அன்னையை இழந்தார். அருணாசல ஆசாரி மறுமணம் செய்தார்.

சித்தியோ கொடுமைக்காரி. இதை உணர்ந்து கொண்ட பாட்டி பேரன்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரும் ஏழை தான். அப்பா நிறைய பணம் சம்பாதிக்க சிங்கப்பூர் போய் விட்டார். சகோதரர்களின் ஆதரவும் இல்லை. பாட்டி வீட்டில் மிகுந்த கஷ்டத்தில் வளர்ந்து வந்தார் தங்கவேலு.

பாட்டு கேட்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் பாட்டுகள் என்றால் கொள்ளைப் பிரியம். எங்காவது திருவிழா நடக்கும்போது கச்சேரி, நாடகம், நடனம் என்றால் முதல் வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வார்.

சிங்கப்பூர் சென்று திரும்பிய தந்தை மீண்டும் குடிபோதையில் வீட்டில் மனைவி பிள்ளைகள் என அடித்து துவம்சம் செய்தார். இதற்குப் பயந்து பிள்ளைகள் சீக்கிரமாகத் தூங்கி விடுவர்.

திருமலைராயன்பட்டினத்தில் இருந்த தங்கவேலுவின் குடும்பம் அவரது 6வது வயதில நாகப்பட்டினத்தை அடுத்த மஞ்சள் கொல்லையில் குடியேறியது. சுமார் 6 மாதங்கள் தங்கியிருந்தது. வெறும் பழையசோறும், மோரும் தான் தங்கவேலுவின் உணவு.

அதை சாப்பிட்டு விட்டு சுள்ளி பொறுக்கப் போய்விடுவார்கள். ஆனால் சித்தியோ தன் மகனுக்கு விதவிதமாக சமைத்துப் போடுவார். சுள்ளி பொறுக்கி வரும் தங்கவேலு குறைவாகக் கொண்டுவந்தால் அடி உதை தான்.

இந்த அடி பொறுக்க முடியாத தங்கவேலுவின் மூத்த அண்ணன் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பம் திரும்பவும் திருமலைராயன்பட்டினத்திற்கு வந்தது.

தங்கவேலுவிடம் அவரது தந்தை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டார். நடிகனாக விருப்பம் என்றார். உடனே தன் மகன் கூத்தாடியாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சகோதரிகளின் பிள்ளைகளிடம் தங்க வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

சித்தியின் கொடுமையிலிருந்து தப்பித்தால் போதுமப்பா என்ற தங்கவேலு சந்தோஷத்தில் அங்கு சென்றார். ஆனால் அது இதை விட மோசமான இடமாக இருந்தது.

அங்கு கடையை க்ளீன் செய்வது, மாட்டைக் குளிப்பாட்டுவது, மேய்ப்பது, துணிகளை துவைப்பது, மாட்டுக்குத் தீனி வைப்பது என்று தான் இவருக்கு வேலை. தயிர் பழைய சோறு தான் சாப்பாடு.

Danaal Thangavelu

மாலையில் கடையை அடைத்துவிட்டு பால் விற்க வேண்டும். புண்ணாக்கு, பருத்தி கொட்டை வாங்கி வந்து வீடு சேர இரவு 10 மணியாகி விடும். இந்த லட்சணத்தில் கடை வேலையை எப்படி கற்பது? திட்டு வேறு. தங்கவேலு வெலவெலத்துப் போனார்.

அப்போது வெளிப்பாளையத்தில் மயில் ராவணன் மௌனப்படம் நடைபெற்றது. ஒரு நாள் ஒரு அணா கிடைத்ததும் யாரிடமும் சொல்லாமல் படம் பார்க்க சென்று விட்டார் தங்கவேலு.

இரவு திரும்பி வாசல் திண்ணையில் படுத்து தூங்கியும் விட்டார். காலையில் அத்தை மகன் அரிக்கேன் விளக்கினால் வயிற்றில் சூடு வைத்து விட்டார்.

தந்தையிடம் சில நண்பர்கள் சொன்னதன் பேரில் காரைக்கால் ஸ்ரீனிவாசன் என்ற புல்லாங்குழல் வித்வானுடன் தங்கவேலுவை சென்னைக்கு அனுப்பினார்.

சென்னையில் பிரபல என்.வி.சண்முகம் பொடி கம்பெனியினர் நாடகசபையை நடத்தி வந்தனர். பிரபல கன்னய்யாவின் சகோதரர்கள் கிருஷ்ணய்யா அதில் வாத்தியராக இருந்தார். தங்கவேலு நடன கோஷ்டிக்குத் தள்ளப்பட்டார்.

நாடகங்களுக்கு ஏற்ற வகையிலே 6 மாதத்திற்குள் அவர் நடனமாடக் கற்றுக் கொண்டார். ஒருமுறை அவர் தவறாக ஸ்டெப் போட்டதால் பிரம்படி பட்டார். செம அடி அது. இதற்கு அம்மாவும், சித்தியுமே மேல் என்று தோன்றியது தங்கவேலுவுக்கு.

மதுரை ராஜாம்பாள் நாடகக் கம்பெனி திருவாரூரில் முகாமிட்டு இருந்தது. யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை தான் அதில் வாத்தியார். அந்தக்கம்பெனியில் காரைக்கால் தியேட்டர் முதலாளி சௌந்தரராஜ பிள்ளையின் ரெகமண்ட்டில் சேர்ந்தார்.

KA thangavelu

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி நடித்தார். ஜனங்க கைதட்டினால் கொட்டகை விழுந்துவிடும் என்று அவருக்கு பயம் வந்தது. வெளியே ஓடிவிடுவார். அதிகமாக கூட்டம் வரக்கூடாது என வேண்டிக் கொள்வார்.

கம்பெனியில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, தங்கமணி என பலர் வந்து சேர்ந்தனர். கம்பெனி நல்ல முன்னேற்றம் கண்டது.

அரக்கோணத்தில் கம்பெனியின் பதிபக்தி நாடகம் நடந்தது. அப்போது எஸ்எஸ்.வாசன் எழுதிய சதிலீலாவதி படத்தை படமாக்க மருதாச்சலம் செட்டியார், அபிராம ரெட்டியார் அந்த நாடகத்திற்கு வந்திருந்தனர். படத்தில் நடிக்க எம்ஜிஆர், சக்கரபாணி, என்.எஸ்.கே. ஆகியோரும் வந்தனர்.

ராதாவை அவர்கள் ஏற்பாடு செய்த போது கம்பெனி நடிகர்களே நடிக்க வேண்டும் என்றார். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் 1935ல் சதிலீலாவதி தயாரானது. அதில் சிறு ரோலில் தங்கவேலு வந்தார். அதற்கு சம்பளம் 75 ரூபாய். இப்படி தொடர்ந்த தங்கவேலுவுக்கு 1947ல் சம்சாரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் 1949ல் சத்தியாவதார் என்ற படத்தில் கணக்குப்பிள்ளையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 6 மாத காலம் அந்தப்படத்திற்காக பம்பாயில் தங்கி இருந்தார் தங்கவேலு. அப்போது என்எஸ்கே. அங்கு நாடகம் நடத்த அங்கு வந்திருந்தார். அவருக்கு அந்தப்படம் போட்டுக் காட்டப்பட்டது.

சில கருத்துகளை சொல்லி மாற்றச் சொன்னார். அப்போது தங்கவேலுவிடம் என்எஸ்கே.க்கு நல்ல அபிப்ராயம் வந்தது. சென்னை திரும்பிய தங்கவேலுவை மீண்டும் வறுமை வாட்டியது. அப்போது மணமகன் படத்திற்கு பூஜை போடப்பட்டது. தங்கவேலு அந்தப் படத்தில் நடிக்க என்எஸ்கே.வைப் போய் பார்த்தார்.

KA Thangavelu 3

ஒரு சிறு வேஷம் கொடுக்கப்பட்டது. அடுத்து அமரகவி படம் அவரது வாழ்வில் ஒரு படியை உயர்த்தியது. பணம் படத்தில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. திரும்பிப் பார் படத்தில் ஒரு கலக்கு கலக்கி விட்டார். சிவாஜி, பண்டரிபாய் நடித்த படம் அது. சிங்காரி படத்தின் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அடிக்கடி படங்களில் டணால் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் டணால் தங்கவேலு ஆனார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டவர் தான் நகைச்சுவை ஜாம்பவான் தங்கவேலு.

google news
Continue Reading

More in Cinema History

To Top