விஜய் படத்துலயே வடிவேலு டைரக்ட் பண்ணியிருக்காரு..! – ஓப்பன் டாக் கொடுத்த நகைச்சுவை நடிகர்.!
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சிறு சிறு காமெடியனாக நடித்து வருகின்றனர். அதில் நடிகர் வடிவேலுவிற்கு என்று தனிக்குழு ஒன்று உண்டு. இவர்கள் அனைவரும் அதிகப்பட்சம் வடிவேலு காமெடிகளில் மட்டுமே வருபவர்களாக இருப்பார்கள்.
அப்படி வடிவேலு காமெடி மூலமாக பிரபலமான நடிகர்களில் கிங் காங் என அழைக்கப்படும் நடிகர் சங்கர் ஏழுமலையும் ஒருவர். இவர் பல காலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்து வருகிறார். அதிகப்பட்சம் இவர் வடிவேலுவுடன் தான் திரைப்படங்களில் தோன்றுவார்.
சுறா, போக்கிரி மாதிரியான சில படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டும் வந்தாலும் இவரது நகைச்சுவை மறக்க முடியாததாக இருக்கும். ஒரு பேட்டியில் அவர் வடிவேலுவை பற்றி பேசும்போது வடிவேலு அவருக்கு உதவிய விதத்தை பேசினார். சங்கர் ஏழுமலை நடிக்கும்போது அவர் எப்படி நடித்தால் நன்றாக இருக்கும், எப்படி வசனம் பேசலாம் போன்ற பல தகவல்களை வடிவேலுதான் வழங்குவார்.
அதிலும் முக்கியமாக போக்கிரி திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவின் பங்கு அதிகமாக இருந்துள்ளது. போக்கிரி திரைப்படத்தில் லாரி ட்ரைவராக சங்கர் ஏழுமலை வருவார். அவர் தண்ணீரை வீணடித்து செல்வதை பார்த்து வடிவேலு அதை நிறுத்த முயற்சி செய்வது போன்ற காட்சி இருக்கும்.
அந்த மொத்த நகைச்சுவை காட்சியையும் வடிவேலு, பிரபுதேவாவுடன் பேசி அவரே இயக்கியுள்ளார். அந்த காமெடி எப்படி வரவேண்டும் என்பதை வடிவேலுவே முடிவு செய்துள்ளார். அதே போல படத்தில் நல்ல நகைச்சுவையை ஏற்படுத்தும் காட்சியாக அது அமைந்திருந்தது.