பல வருடங்கள் தலைமறைவாக இருந்த விசித்ரா… ரஜினி படத்தால் மீண்டும் வந்த வெளிச்சம்…

Vichitra
1990களில் பல இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வந்தவர் விசித்ரா. இவர் “வீரா”, “அமைதி படை”, “முத்து”, “வில்லாதி வில்லன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விசித்ரா மிகவும் பிசியான நடிகையாக இருந்தபோதே ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Vichitra
ஆனால் அந்த சமயத்தில் அவரை சுற்றி பல கிசுகிசுக்கள் கிளம்பின. ஆதலால் அவரின் திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்பட்டதாம். எனினும் தனது கணவனுக்காக சினிமாத் துறையை அப்படியே விட்டுவிட்டார். மேலும் தனது கணவனிடம் “நீங்கள் என்னை எங்கு அழைத்துக்கொண்டுப் போகிறீர்களோ, நான் வருகிறேன்” என கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து சினிமாத் துறையில் இருந்து மொத்தமும் விலகிவிட்டார் விசித்ரா. அதே போல் சினிமாத் துறையைச் சேர்ந்த யாரிடமும் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. அதன் பின் தனது கணவனுடன் இணைந்து பூனே, கோவா, மைசூர் போன்ற இடங்களில் உணவகங்களை நடத்தி வந்திருக்கிறார். மேலும் இவருக்கு 3 குழந்தைகளும் பிறந்திருக்கிறது.

Vichitra
அவரின் குழந்தைகளுக்கே தனது தாய் ஒரு நடிகையாக இருந்தவர் என்று தெரியாதாம். அந்த அளவிற்கு யாரிடமும் தன்னை முன்னாள் நடிகையாக காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே வலம் வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு மைசூரில் குடியேறியபோது அவரது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள், விசித்ராவை அடையாளம் கண்டுகொண்டார்களாம்.
“நீங்கள் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் நடித்தவர்தானே” என கேட்கத் தொடங்கிவிட்டனராம். அதன் பிறகு வேறு வழியில்லாமல் ஆமாம் என ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் பின்தான் அவரது குழந்தைகளுக்கே தனது தாய் ஒரு நடிகை என தெரிய வந்திருக்கிறது.

Vichitra
மேலும் அவர் நடத்தி வந்த ஹோட்டலில் சாப்பிட வரும் தமிழர்கள் பலரும் அவரை அடையாளம் கண்டு, “மேடம், நீங்க என்ன மேடம் இங்க இருக்கீங்க?” என கேட்கத் தொடங்கிவிட்டனராம். அதன் பின் நடிகை விசித்ரா மைசூரில் இருப்பதாக தகவல் கசிய, ஒரு யூட்யூப் சேன்னல் அவரை பேட்டி எடுத்திருக்கிறது. இவ்வாறுதான் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார் விசித்ரா.
தற்போது விசித்ரா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.