துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என கவனம் ஈர்த்தார். துவக்கத்தில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தாலும் அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
ஒருவரை பார்க்க பார்க்க பிடித்து விடும் என்பது போல தனுஷையும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. ஒரு பக்கம் கமர்சியல் மசாலா படங்களிலும், ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஆடுகளம், அசுரன், வடசென்னை, கர்ணன், குபேரா, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் கவனம் பெற்றன. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.
அதேபோல் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். பல படங்களில் பாடியும் இருக்கிறார். தனுஷ் கடந்த சில வருடங்களாவே ஒரு ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார். ஒரு தயாரிப்பாளரிடம் ‘உங்களுக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடித்துக் கொடுக்கிறேன்’ என பேசி ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என 3 படங்களுக்கு வாங்கி கல்லா கட்டி வருகிறார்.
தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசுக்கு நெருக்கமாக உள்ள தனுஷ் அவரின் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தை போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி முடித்துவிட்டார். சமீபத்தில் கூட கர என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 என இரண்டு படங்களையும் தயாரிக்கப் போவதும் ஐசரி கணேஷ்தான்.
ஒவ்வொரு படத்திற்கும் 60 கோடி சம்பளம் பேசி மொத்தம் மூன்று படத்திற்கும் சேர்த்து 180 கோடி டீல் முடிந்து அதில், 90 கோடியை அட்வான்ஸாக வாங்கிவிட்டாராம் தனுஷ்.




