நல்ல வேளை ஓடிடி.! தியேட்டருக்கு வந்திருந்தா ரசிகர்கள் கதி?!
தனுஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து OTTயில் வெளியாகி வருகின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை இந்த படம் OTTயில் வெளியாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடும் அளவிற்கு தான் இருந்து வருகிறது. ஜகமே தந்திரம் அப்படித்தான் அமைந்தது. நேற்று OTTயில் வெளியாகியுள்ள மாறன் திரைப்படமும் அதை விட மொக்கையாக அமைந்ததுதான் சோகம்.
இந்த திரைப்படத்தை எடுத்து கொண்டிருக்கும்போதே இயக்குனருக்கும் தனுஷுக்கும் பிரச்சனை, அதனால் சில காட்சிகளை தனஷே இயக்கி விட்டார் என்ற செய்திகளெல்லாம் வலம் வந்தன. இந்த படத்தை ஹாட்ஸ்டார் தளத்திற்கு கொடுத்து கொடுப்பதற்கு முன்மொழிந்ததே தனுஷ்தான் என்ற பேச்சு அடிபட்டது. அதற்கெல்லாம் பதில் இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நன்றாக புரிந்து விட்டது.
துருவங்கள் பதினாறு எனும் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் தனது திரைக்கதையின் மூலம் கதையின் சுவாரஸ்யத்தை அருமையாக அமைத்து இருப்பார். அதன் பிறகு வெளியான மாஃபியா திரைப்படத்தில் கூட திரைக்கதை ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஆனால், மாறன் திரைப்படத்தில் முதல் காட்சி தொடங்கியதிலிருந்து இறுதிக்காட்சி முடியும் வரை அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று தமிழ் சினிமாவை பார்க்கும் சாமானிய ரசிகன் கூட சொல்லும் அளவிற்கு அவ்வளவு அபத்தமாக இருந்தன.
தனுஷின் அப்பாவாக ராம்கி, நேர்மையான பத்திரிகையாளராக இருந்து கெட்டவர்களால் கொல்லப்படுகிறார். கொல்லப்படுவதற்கு முன்னர் நேர்மையாக வாழவேண்டும் என்று சின்ன வயசு தனுஷிற்கு சொல்லிவிடுகிறார். அதேபோல தனுசும் நேர்மையான பத்திரிகையாளர் என்று காட்டிக் கொள்கிறார்.
அவருக்கு ஒரு தங்கச்சி. அந்த தங்கச்சியை கொலை செய்து விடுகின்றனர். பின்னர் குடிக்கு அடிமையாகி விடுகிறார். மாஸ்டர் படத்தில் விஜய் திருத்துவது போல, கிட்டத்தட்ட அதே காட்சியில் மாளவிகா மோகனன் அப்படியே நடித்து விடுகிறார்.
அதன் பின்னர் தனது தங்கச்சியை கொலை செய்தவர்களை தனுஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? உண்மையில் என்ன நடந்தது? சமுத்திரக்கனி வில்லனாக வந்து என்னதான் செய்கிறார்? என்கிற மீதிக்கதை தான் மாறன் படத்தின் மொத்த கதையுமே.
அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகளில் மிகவும் ஓவராக நடித்துள்ளனர். ஹீரோயின் மாளவிகா மோகனன் எதற்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வபோது தனுஷை காதலிப்பதாக கூறுகிறார். அவ்வளவு தான் அவருக்கு வேலையே இல்லை. ஒரு டூயட் பாடல் கூட கிடையாது.
சமுத்திரக்கனிக்கும் அந்த அவரது டோபா தலைக்கும் சுத்தமாக செட்டாகவில்லை. ஒரு அரசியல்வாதியாக எப்படி நடிக்க கூடாது என்று சமுத்திரகனி இந்த படத்தில் காட்டி விட்டார். அவ்வளவு பலவீனமாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜிவி.பிரகாஷ் இசையில் ஒரு பாடல் கூட நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையும் ரொம்ப சுமார் ரகம் தான். இந்த படம் OTTயில் ரிலீசாக உள்ளது என்று தெரிந்த உடன், பின்னணி இசையில் சுத்தமாக கவனமில்லாமல் இசையமைத்து விட்டார் போல அப்படித்தான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருந்தது.
இதையும் படியுங்களேன் - ராஜ்கிரணை திட்டம் போட்டு அசிங்கப்படுத்திய தெலுங்கு சூப்பர் ஹீரோ.! சினிமாவில் இதெல்லாம் சகஜம்.!.
படத்தின் கதையை கூறி தனஷை சம்மதிக்க வைத்து, திரைக்கதையில் சொதப்பி வைத்துள்ளார் கார்த்திக் நரேன். படம் வந்தால் போதும் என்ற முடிவுடன் தனுஷும் நடித்துவிட்டார் போல. அப்படித்தான் ஒரு காட்சியிலும் நடிப்பு தான் என தெரியும் அளவுக்கு நடித்து இருந்தார்.
நீங்கள் தனுஷ் ரசிகர் என்றால் இந்த படத்தை பார்த்தால் நிச்சயமாக தனுஷ் ரசிகராக இருப்பதற்கு யோசிப்பீர்கள் என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு மாறன் திரைப்படம் ரசிகர்களை மிகவும் சோதித்து விட்டது.
சீக்கிரம் அசுரன், கர்ணன் போல ஒரு கதையை தேர்ந்தெடுத்து கம்பேக் கொடுத்துவிடுங்கள் தனுஷ் என கூறும் அளவிற்கு கொண்டு செல்கிறது தனுஷின் அடுத்ததடுத்த ரிலீஸ்கள்.