தமிழ் சினிமாவில் பலவிதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். சில இயக்குனர்கள் தான் சார்ந்த சாதியை தூக்கிப் பிடிப்பது போல படம் எடுப்பார்கள். ஆர்வி உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், முத்தையா என சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல் சில இயக்குனர்கள் தான் சார்ந்த சாதி எப்படி மதிக்கப்படுகிறது?.. தன்னுடைய சாதியினர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?.. தன்னுடைய சாதியினரை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது? என்பதை திரைப்படமாக எடுப்பார்கள். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகியோரை இதற்கு முக்கிய உதாரணங்களாக சொல்ல முடியும்.
அதேநேரம் பா.ரஞ்சித் ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கினார். மாரி செல்வராஜ் தனுசை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ஒருபக்கம் மோகன்.ஜி போன்ற இயக்குனர்கள் ஒரு சாதியினரை இழிவு படுத்துவது போல விமர்சித்து படங்களை எடுத்து வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் இவரை ட்ரோல் செய்வதுண்டு.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய மோகன்.ஜி ‘என்னைவிட ரஞ்சித்துக்கு நிறைய வாய்ப்பு வருதுன்னு சொல்றாங்க.. ஆனா எனக்கு கிடைக்கக்கூடிய பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறது இல்லை.. நான் கோவிலுக்கு போனா என்ன கைய புடிச்சு விஐபி வரிசையில் அழைச்சிட்டு போவாங்க.. தென் மாவட்டங்களுக்கு நான் போனா அங்க இருக்குற மக்கள் என்ன வீட்ல உட்கார வைச்சி அவங்க பிள்ளை மாதிரி என்னை சாப்பிட வைப்பாங்க.. இதெல்லாம் ரஞ்சித்துக்கு கிடைக்குமானு எனக்கு தெரியல’ என பேசியிருக்கிறார்.
இதையடுத்து மோகன்.ஜி ‘சாதிய சிந்தனையோடு படமெடுப்பது மட்டுமில்லாமல், சாதி சிந்தனையோடு பேசியும் வருகிறார்’ என சமூக ஆர்வலர்கள் பலரும் அவரை சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.. வருகிற 23ம் தேதி மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி 2 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




