நவீன பாக்கியராஜ் யாருன்னு தெரியுமா? யாரப்பா அந்த இயக்குனர்? அவரே சொல்லிட்டாரே!

bhagyaraj
சினிமாவில் கதை எழுதணும்னு நிறைய பேர் ஆர்வமா இருப்பாங்க. அவங்களுக்கு நிறைய டிப்ஸ் கொடுக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.
சினிமாவில் சாதனை படைத்த இயக்குனர்களான பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் படங்களை எல்லாம் பார்த்தா அவங்களோட படங்களில் வரும் சில காட்சிகளோ, கதையோ நாம் எங்கேயோ கேட்டது போல இருக்கும். அல்லது நம்மைச் சுற்றி நடந்தது போன்ற உணர்வைத் தரும். அதைத் தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும்.
உண்மையில் நம்மைச் சுற்றிலும் என்ன நடக்குது? எந்த வகையில் மனிதர்கள் இருக்கிறார்கள்? எப்படிப் பழகுறாங்க? என்னென்ன செய்றாங்க என்பதைக் கூர்ந்து கவனித்தால் போதும். அங்குதான் கதை இருக்கு. திரைக்கதை இருக்கு. காமெடி என எல்லாமே இருக்கு. அதை நமக்கு ஏற்ற மாதிரி நாம் மாற்றி திரைக்கதையாக சொல்லி விடலாம். பகவதி படத்தில் விஜய் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து ஒவ்வொரு காய்கறியா வாங்குவாரு.
அப்போ அந்தத் தங்கம் என்ன விலைன்னு கேட்பாரு. அதாங்க. தக்காளி. அதுதான் தங்கம் விலைக்கு விற்குதுல்லன்னு சொல்வாரு. அப்புறம் தங்கத்துக்குத் தங்கச்சி, நாத்தனார், மாமியார்னு ஒவ்வொரு பேரா சொல்லிக் காய்கறியை வாங்குவாரு. கடைசியா கொத்தமல்லி, கருவேப்பிலைக்கு பேரன், பேத்தின்னு சொல்வாரு. அதை நான் உண்மையிலேயே கோயம்பேட்டுல ஒருத்தர் வாங்கும்போது பார்த்தேன். அதைத்தான் படத்துல வச்சிருக்கேன். அது நல்லா ரீச்சானது.
அதே மாதிரி எந்த ஒரு படத்துக்கும் ஒரு லைன்ல கதை சொல்லணும். மிஞ்சிப் போனா நாலு லைன்தான். அதுதான் திரைக்கதையாவும், இன்டர்வல் பிளாக்காவும், கிளைமாக்ஸாகவும் மாறும். அதுக்கு ஏற்ற மாதிரி டுவிஸ்ட்டா வச்சிக் கொண்டு போகணும். நாம எழுதுன கதை இந்த நியதிக்குள்ள அடங்கினா அது நிச்சயம் வெற்றி பெறும். இப்ப உள்ள திரை உலகில் பாக்கியராஜ் மாதிரி கதை எழுதுறவரு பிரதீப் ரங்கநாதனைச் சொல்லலாம்.
அவரு எழுதி இயக்கிய கோமாளி படம் பேசப்பட்டது. அப்புறம் லவ் டுடே. இப்போ அவர் நடித்த டிராகன் சூப்பர்ஹிட். இதெல்லாம் ஒரு வரி கதைதான். 40 அரியர்ஸ் வச்சிருக்குறவன் பொய் சொல்லி வேலைல சேருகிறான். ஒரு கட்டத்துல அது தப்புன்னு உண்மையை ஒத்துக்குறான். அப்புறம் பாஸாகி அதுல இருந்து எப்படி வெளியே வாராருங்கறதுதான் கதை.
சமீபத்திய வீரதீர சூரன் கூட ஒரு வரி கதைதான். இதுல தன்னைக் காப்பாத்தக் கூட்டி வர்ற ஒருத்தனே அவனைக் கொல்றான். ஏன் எதுக்கு எப்படிங்கறதுதான் திரைக்கதை. அங்காடித்தெருல நான் கருங்காலி கேரக்டர்ல நடிச்சேன். அந்தப் பட இயக்குனர் வசந்தபாலன் நிஜமாக நடக்குற சம்பவங்களை வைத்துத்தான் கதை எழுதுனாரு. அதான் ஹிட் ஆச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.