20 ஆண்டுகளாக போராட்டம்!.. பாராட்டுகளை பெற்ற ‘கிடா’ - ரசிகர்களைப் போய்ச் சேராதது ஏன்?

by sankaran v |   ( Updated:2023-11-17 09:51:29  )
Kida movie
X

kida4

தீபாவளிக்கு வெளியான படங்களில் கிராமிய மண்ணின் அழகியலோடு வந்த படைப்பு கிடா. இது ரசிகர்களுக்குப் பெரிய விருந்து கொடுக்கும் என்று பார்த்தால் முதலில் பலியிடப்பட்டது இந்த கிடா தான். இதுகுறித்து இயக்குனர் ஆர்.ஏ.வெங்கட் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

நான் மதுரைக்காரன். வளர்ந்தது ராமேஸ்வரம். 2003ல் சினிமாவுக்கு வந்தேன். 20 வருஷம் கழிச்சி இப்போ என்னோட படம் வருது.

அப்பா 98ல இறந்துட்டாரு. குடும்ப வறுமைக்காகப் பேப்பர் போட ஆரம்பிச்சேன். பேப்பர்ல சினிமா செய்திகள் படிக்க ஆரம்பிச்ச போது சினிமாவுக்குப் போக ஆசை. அப்படித்தான் வந்தேன். முதல்ல ஆபீஸ் பாய் வேலைதான் கிடைச்சது. அப்புறம் அசிஸ்டண்ட் டைரக்டருக்கு வாய்ப்பு தேடி அலைஞ்சேன். எதுவும் கிடைக்கல.

கரு பழனியப்பனோட சிலப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம்னு ரெண்டு படத்துலயும் ஆபீஸ் பாயா இருந்தேன். அங்கே சூர்யான்னு ஒருத்தரோட பழக்கம். இவரு தான் அவரோட நண்பர் ஆபீஸ்ல சேர்த்து விட்டாரு.

தீபாவளி வந்து காசு இருக்கோ, இல்லையோ எல்லா மக்களோடயும் கனெக்டாகுற விஷயம். அதுக்கு ஒரு களம் தேவைப்பட்டுச்சு. ஒரு பையன் தாத்தாக்கிட்ட தீபாவளிக்கு டிரஸ் கேட்க, அதை வாங்கிக் கொடுக்க முடியாத சூழல்.

வெறும் டிரஸ்ச மட்டும் வச்சிப் படம் பண்ண முடியாதுங்கறதுக்காக ஒரு ஆட்டை வச்சி அந்த ஆடுக்கும் பையனுக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். தாத்தாவால டிரஸ் வாங்கிக் கொடுக்க முடியாததால அந்த ஆட்டை விற்கப் போறாரு. ஆனா அது எல்லாமே சேர்ந்து ஒரு அழகியலா வந்துருச்சு.

பர்ஸ்ட் லாக் டவுன்ல இந்த மாதிரி படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். எங்க ஆச்சி ஊரு கம்பூர். மேலூர் பக்கத்துல உள்ள கருங்காலக்குடி பக்கத்துல இந்த ஊர் இருக்கு.

அங்கேயே இந்தப் படத்தை எடுத்துக்கலாம்னு நினைச்சேன். ஒரு ஆடு தான் தேவைப்பட்டுது. ஆடுக்கூட பழகணும்கறதுக்காக அதை முதல்ல வாங்கினோம். ஒரு இடத்துல ஆட்டைப் பார்த்தோம். வாங்கறதுக்காக அந்தப் பெரியவரிடம் கேட்டேன்.

என்னப்பா சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டைப் போயி விலை பேசறீயே? உனக்கு அறிவு இருக்கான்னு கேட்டாரு. ஒரு ஊர்ல குட்டியப் பார்த்தோம். பிரண்டு ராஜூவோட அம்மா தான் அந்த ஆட்டை மேய்ச்சல் கூட்டிட்டுப் போயி வளர்த்தது. அதுக்குப் பேரு கிடையாது.

டெய்லி கருப்புன்னு கூப்பிடுங்கம்மா... அப்படியே பழகிப் பார்ப்போம்னு சொன்னேன். அப்படிப் பழகப் பழக ஓரளவு நல்லா பழகிடுச்சு. இந்தப் படத்துல கறிக்கடைக்காரர் ரோல் தேவைப்பட்டுச்சு. அதுக்குக் காளி அண்ணேன் எனக்கு முன்னாடியே பழக்கம். அவருக்கிட்ட இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படம் பண்றேன்னு நடிக்கக் கேட்டேன். அவரு ஒண்ணுமே சொல்லல. வாங்க நீங்க. பண்ணிக்கலாம்னுட்டாரு.

ஆனால் அழகான படைப்புக்கு வரவேற்பு இல்லாதது தான் வருத்தத்திற்குரிய விஷயம். பொதுவாக சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே ரசிகர்கள் பெரிதும் வரவேற்பதில்லை. ஆனால் காலதாமதமாக இதன் அருமையை உணர்ந்து கொள்வார்கள் என்பது மட்டும் உறுதி.

Next Story