இந்த படங்கள் மட்டும் வந்திருந்தால் எம்ஜிஆரும், பாக்யராஜூம் வேற லெவல் தான்...! வட போச்சே..!
சில படங்களை நாம் பார்க்கும் போது அந்த படம் ஏன் வராமல் போனது? நல்ல பாடல்கள், கதை அம்சம் கொண்ட படங்கள் அல்லவா என்ற ஆதங்கம் வரும். ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து அந்தப் படங்கள் வராமல் போனால் அந்த நடிகர்களுக்கு மட்டுமல்ல.
ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் தான். அந்த வகையில் உலகநாயகனின் மருதநாயகம் படம் வராமலே போய்விட்டதே என்ற ஏமாற்றம் இன்று வரையில் இருந்து கொண்டு தான் உள்ளது. இவை தவிர பல படங்கள் ஏதோ சில காரணங்களால் பாதியிலேயே டிராப் ஆகி உள்ளன. அவற்றில் சில படங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
இணைந்த கைகள்
இந்தப்படத்தைப் பார்த்ததும் நமக்கு நினைவுக்கு வருவது அருண்பாண்டியன், ராம்கி இருவரும் இணைந்து நடித்த பிரம்மாண்டமான படம் இணைந்த கைகள் தான். படம் செம ஹிட் அடித்தது. ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள படம் அதுவல்ல.
உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பாக, எம்.ஜி.ஆர், தயாரித்து, இயக்கி, நடித்த பிரம்மாண்ட படம். இப்படத்திற்காக 3 பாடல்கள் பதிவானது. அவற்றில் நிலவு ஒரு பெண்ணாகி;, அவளொரு நவரச நாடகம்... என்ற 2 பாடல்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும், கொஞ்சநேரம் என்னை மறந்தேன் என்ற பாடல் சிரித்து வாழவேண்டும் படத்திலும் இடம்பெற்றன.
இந்தப்படம் முதலில் ஈரானில் தான் படமாக்கத் திட்டமிடப்பட்டது. அங்கு அனுமதி கிடைக்காததால், இங்கேயே படமாக்கப்பட்டது. மன்னராட்சிக் கால கதை. கீதாஞ்சலி என்பவர், ஜோடியாக நடித்தார். பிறகு, என்ன காரணத்தாலோ படம் கைவிடப்பட்டது.
அண்ணா நீ என் தெய்வம்
ஸ்ரீதர் இயக்கத்தில், எம்.ஜி.ஆர் நடித்து, பாதியில் நின்றுபோன படம். இப்படத்தின் இரு பாடல்களும், சில காட்சிகளும், பாக்யராஜ் இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்த, அவசர போலீஸ் 100 என்ற படத்தில் இடம்பெற்றுள்ளன. எம்ஜிஆர் கடைசியாக நடித்து நின்ற படமும் இதுதான். இதற்குப் பிறகு அவர் முதல்வராகி விட்டார்.
காவடிச்சிந்து
பாக்யராஜ், அமலா நடிப்பில், பாக்யராஜ் இசை, இயக்கத்தில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் கேசட்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டாயின. ஜாமக்கோழி கூவியாச்சு என்ற ஒரு பாடல் மட்டும் பட்டணந்தான் போகலாமடி என்ற வேறு படத்தில் இடம்பெற்றது. என்ன காரணத்தாலோ தெரியவில்லை.
காவடிச்சிந்து படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பாக்யராஜ் இசை அமைத்த படம் என்பதாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்தன. ஆனால் படம் வராததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நல்லதை நாடு கேட்கும்
எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான படம். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில், படம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, ஜேப்பியார் இதேபெயரில் தயாரித்து, நடித்து வெளியிட்ட படத்தில், இப்படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றன.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் படத்தில் இவர் வசனம் பேசி நடித்த ஒரே படம் இதுதான்.
பவானி
எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி நடிப்பில், கண்ணதாசனின் கதை, வசனம், பாடல், இணைதயாரிப்பில் உருவான இப்படம், 20,000 அடிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்டது. இது என்ன காரணத்திற்கு என்ற விவரம் தெரியவில்லை.
அடிமைப்பெண்
இந்தப்படம் தான் வந்து விட்டதே...இதை எப்படி இந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, ஜெயலலிதா, நம்பியார் உள்ளிட்ட நடிகர்களை வைத்து, எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த படம், 10,000 அடிகளுக்குமேல் தயாரிக்கப்பட்ட நிலையில், படம் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காமல் போனது. அதனால், படச்சுருளை எரித்துவிட்டு, வேறொரு புதிய கதையுடன், நடிகர்கள் பலரை மாற்றி தற்போதுள்ள அடிமைப்பெண் படத்தை, தயாரித்து நடித்தார். இயக்குநர் பொறுப்பை, கே.சங்கரிடம் ஒப்படைத்தார்.
மதகஜராஜா
விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் முழுமையாக உருவாக்கப்பட்டு விட்ட இப்படம், நிதி நிர்வாகச் சிக்கல்களால், தற்போது வரை வெளியாகாமலே உள்ளது.