இந்த சக்திக்கு முன்னாடி மற்ற சக்தி எல்லாம் ஜூஜூபி...! மனிதர்களுக்கு இப்படி எல்லாம் கூட நடக்குமா?
சில சம்பவங்களைப் பார்க்கும்போது முதலில் நம்பவே முடியாது. இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று எண்ணத் தோன்றும். ஆச்சரியம்...ஆச்சரியமாக இருக்கும். நான் காண்பது கனவா இல்லை நனவா என்று கூட எண்ணத் தோன்றும். அப்படி ஒரு அதிசயமான சக்தி நமக்கு வாய்த்தால் எப்படி இருக்கும்? நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி.
அதுதான் ஈஎஸ்பிஎன் பவர். இதை ஆங்கிலத்தில் எஸ்ட்ரா சென்சாரி பர்செப்ஷன் (Extra Sensory Perception) என்று சொல்வார்கள். இந்த அபூர்வ சக்தி ஒரு சிலருக்கு உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சக்தியை மையமாகக் கொண்டு தமிழ்சினிமாவில் ஒரு படம் எடுத்துள்ளார்கள். இந்தப்படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இதுகுறித்து ஆச்சரியமான தகவல்களை அளிக்கிறார் பாருங்கள்.
சினிபாரத் கம்பெனிக்கு ஒரு படம் எடுக்க வேண்டியிருந்தது. டாக்டர் சிவாவுக்குப் பின் ராஜேந்திர குமாரின் ஒரு குறுநாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஈஎஸ்பிஎன் என்ற ஒரு பவர் உண்டு. அதாவது நடக்கப்போவதைத் தெரிந்து கொள்ளும் சக்தி சிலரிடம் இருப்பதை வைத்து எழுதி இருந்தார். இது உண்மைச் சம்பவம்.
ரஷ்யாவில் ஒரு கட்டடத் தொழிலாளி 3வது மெத்தையிலிருந்து விழுந்தான். மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தான். டாக்டர்களின் பெரும் முயற்சியால் பிழைத்து நினைவு திரும்பினான்.
அப்போது அவனைச் சுத்தம் செய்ய நர்ஸ் உள்ளே வந்து அவனைத் தொட்டாள். அவன் உடலில் ஒரு அதிர்வு. அவன் மனக்கண் முன் ஒரு காட்சி ஓடி இருக்கிறது. அந்தப் பெண்ணைப் பார்த்து உன் காதலன் அழைத்தால் இன்று இரவு அவனுடன் செல்லாதே என்றான். அந்தப் பெண் ஏன் போகக்கூடாது. நான் போகப்போவது உனக்கு எப்படித் தெரியும்? என்றார்.
அவன் போகாதே. அவன் உன்னைக் கொன்று விடுவான். போகாதே. நான் சொல்வதைக் கேள் என்றான். நர்ஸ் டாக்டரை அழைத்து இவன் பட்ட பலத்த அடியால் பைத்தியம் பிடித்து விட்டது. என் காதலன் இன்று இரவு என்னைக் கொல்லப் போகிறான் என்று பிதற்றுகிறான் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள்.
மறுநாள் சேதி வந்தது. நர்ஸ் வரவில்லை. அவள் முன் இரவு காதலனால் கொல்லப்பட்டாள். காதலனும் போலீசில் சரணடைந்து விட்டான்.
அவன் தலையிலே பட்ட அடியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனுக்கு நடக்கப் போகும் எதிர்காலத்தைக் காணும் சக்தி வந்திருக்கிறது. பின் அவன் பல நிகழ்ச்சிகளைப் பற்றிச் சென்னதும் உண்மையானது.
கடைசியில் அவன் யாரையும் பார்க்காமலேயே தனித்து வாழ்ந்தான். போலீசும் பிடிக்க முடியாத கேஸ்களுக்கு அவனை உபயோகித்தது என்று படித்திருக்கிறேன். அது இந்த நாவலைப் படமாக்கத் தூண்டியது.
ஸ்ரீதேவி இரட்டைச் சகோதரிகளாக இருவேடங்களில் நடித்த படம். இன்றைய சூப்பர்ஸ்டார், விஜயகுமார், ஜெய்கணேஷ், சுப்பையா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, எஸ்.வி.சுப்பையா, ஜெயசித்ரா ஆகியோர் நடித்தனர். அதில் ஒரு ஸ்ரீதேவிக்கு இந்தப் பவர் வந்து விடுகிறது.
அவனைக் குறிகாரியாகவும், தெய்வப்பிறவியாகவும் சமூகம் மாற்றப் பார்க்கிறது. மிரண்டு போன சராசரிப் பெண்ணான ஸ்ரீதேவி இதிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டும் என்றே பொய் சொல்லி மக்களின் இந்த மூடப்பிடியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்.
உண்மையில் ஒரு நாள் அவள் அக்கா மட்டும் அக்காவின் கணவனின் வாழ்க்கையில் நடக்கப்போகும் ஒரு துர்மரணத்தை அது நடக்கப்போகும் விதத்தையும் தெரிந்து கொண்டவள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும், அவள் பேச்சை உற்றவர்களே நம்பவில்லை.
தெரிந்தும் விதியைத் தவிர்க்க முடியவில்லை. மற்றவர்கள் விடவில்லை. ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் காதலனாகவும், ஆங்கிலோ இந்திய இளைஞனாகவும் நடித்தார். படத்தின் பெயர் வணக்கத்திற்குரிய காதலியே.
இந்தப்படம் 1978ல் திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியானது. ரஜினிகாந்த், விஜயகுமாரி, ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.