நாத்திகத்தை அடக்க விஸ்வரூபம் எடுத்த இயக்குனர்...! திருவிளையாடலில் நக்கீரராக நடித்தது இவரா...?!
நாத்திகம் தலைதூக்கிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தமிழகம் சிக்கி தவியாய் தவித்தது. அப்போது தனி மனிதனாக இருந்து தன் எதிர்காலம் கருதாமல் உழைத்து சினிமாவில் தனக்கென தனியிடத்தைத் தேடிக் கொண்டார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.
ஒரு நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். சேலத்திலிருந்து வந்த சீலன் அவர். சிறுவயது முதலே கஷ்டப்பட்டு அதன்பின் இஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்து அசத்திய அற்புத மனிதர்.
அதற்காக அவர் பணத்தை நாடவில்லை. புகழைத் தேடவில்லை. இந்து மதம் ஒன்றே தன் தர்மம் என்றும் அதை தன் தொழிலில் சினிமாவில் வசனத்தில் பரப்பி நிலைக்கவைத்து அதன் புகழ்பாடுவதே தன் சுயதர்மம் என்றும் கடைசிவரை நின்றார். தமிழக கலைஞர்களிலே உன்னதமானவர்.
கலை என்பது ஒரு வரம், அந்த வரத்தை தன் தொழிலை இறையனாருக்கு செய்வேன் என்பது உன்னத ஆத்மா ஒன்றிலே எழும் பெரும் பக்தி. அந்த பக்தி ராஜராஜசோழனை போல வெகுசிலருக்கு இருந்தது.
அதுதான் ஏ.பி நாகராஜனுக்கும் இருந்தது, அதில்தான் தமிழக இந்துக்கள் பெரும் புண்ணியம் பெற்றனர்
"திருவிளையாடல்" படத்தில் தருமி நாகேஷ_டன் நக்கீரராக நடித்த அந்த ஏ.பி நாகராஜனை மறக்கவே முடியாது. தன் பாட்டில் குற்றமா என சிவனாக வரும் சிவாஜி பொங்கி கோபக்கனலுடன் அவரிடத்தில் வசனம் பேசுகையில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என அமைதியாகப் பதில் சொல்வார்.
இன்றும் மதுரை ஆலயத்தை நினைத்தால், அன்னை மீனாட்சி வருவாள். அப்படியே சிவபெருமான் வருவார்.
இன்னும் பாண்டிய மன்னர்களும், தமிழ்சங்க அகத்தியரும், முருகனும், அவ்வையும், வள்ளுவனும் இன்னும் யார் யாரெல்லாமோ குமரகுருபரர் காலம் வரை வருவார்கள். அவர்களில் நிச்சயம் நக்கீரராக நடித்த ஏ.பி நாகராஜன் நினைவு வரும்.
அதுதான் அந்த தெய்வீக இயக்குநர். அருட்பெரும் ஜோதி எனும் படத்திலும் அவர் நடித்திருந்தார். நல்ல நடிகரும் கூட. ஆனால் நடித்த இரு காட்சியிலும் இறை அடியாராக மட்டும் வந்தார்.
சினிமாவில் இந்துமதத்தையும் அழகு தமிழையும் எக்காலத்துக்கும் நிலைக்கும் பக்தி பாடல்களும் நிலைக்க இவரே முக்கிய காரணம். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், நவராத்திரி படங்களைப் பார்த்தால் பக்தி மணம் கமழும். இன்றும் நாம் பக்திப்படங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவற்றைத் தான் சொல்வோம்.
தமிழ்ப்படங்களில் பல படங்கள் பக்தி மணம் கமழ வந்துள்ளன. என்றாலும் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள படங்கள் என்றால் மக்கள் விரும்பி ரசிக்கக்கூடிய அளவில் இருக்கும். எந்த ஒரு படத்தைப் பார்த்தாலும் நாம் பக்திப் பரவசமாகிவிடுவோம். அப்படி ஒரு அற்புதத்தை இந்தப் படங்கள் நமக்கு உணர்வின் வாயிலாக ஊட்டிவிடும்.