சிவகார்த்திகேயன் உடன் மோதும் விக்ரம்.. முதல் நாள் வசூல் யாருக்கு அதிகம் வரும்? முழு தகவல்
இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்கும் "துருவ நட்சத்திரம்" படமும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படமும் ஒரே நாளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தாமரை எழுதிய 'ஒரு மனம்' என்ற சிங்கிள் பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் விக்ரம் & இயக்குனர் கௌதம் மேனன் சந்தித்து படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த துருவ நட்சத்திரம் படம், வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 28 ஆம் தேதி, விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கலான் படத்தில் தற்போது விக்ரம் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படமும் துருவ நட்சத்திரம் படமும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள் முதல் நாளில் 7 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்து வருகின்றன. மாவீரன் படமும் குறைந்த பட்சம் 10 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படங்களும் (பொன்னியின் செல்வன் தவிர்த்து) கிட்டத்தட்ட 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்து வருகின்றன. இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது இந்த வசூல்கள் குறைய அதிக வாய்ப்புள்ளது. மேலும் இரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு உள்ளதால் இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் கௌரவமான தொகையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் துருவ நட்சத்திரம் படத்தினை விட அதிகமாக வசூலிக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.