ஒரே உறையில ரெண்டு கத்தி...ஒருவர் காமெடியன்...இன்னொருவர் காமெடியுடன் ஓவியர்
இடிச்சப்புளி செல்வராஜ். பேரைக் கேட்டாலே கிளுக்கென்று ஒரு சிரிப்பு வந்து விடும். இவர் காமெடியில் வெளுத்து வாங்கும் நடிகர். அதுமட்டுமல்லாமல் உதவி இயக்குனர் என இன்னொரு முகமும் கொண்டவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் இவர் தான் உதவி இயக்குனர்.
500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவையாக நடித்து பின்னி பெடலெடுத்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி ஆகிய பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நடித்த நடிகர் இவர் என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
சின்னவாத்தியார் படத்தில் இவர் கவுண்டமணி, செந்திலுடன் நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார். மற்றொரு படத்தில் கவுண்டமணி, செந்தில் உடன் காது கேளாதவராக வந்து இடிச்சபுளி செல்வராஜ் அசத்தி விடுவார்.
அந்தக்காட்சியில் இனிமே இங்கே நீ நின்னேன்னா கிழிச்சிடுவேன்னு சொல்வார் கவுண்டமணி. நான் தான் குளிச்சாச்சேன்னு சொல்வார் இடிச்சபுளி. ஐயோ முருகா...ன்னு தலையில் கைவைத்த படி கவுண்டமணி உட்கார்ந்து விடுவார்.
இந்த வீட்ல எத்தனை தடவை தான் குளிக்கிறதுன்னு புலம்பியபடி செல்வார் இடிச்சபுளி செல்வராஜ். 1939ல் பிறந்த இவர் 2012ல் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
இந்த பிரபல காமெடி நடிகருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரும் பிரபல காமெடியன் தான். பெயர் பாண்டு. இவர் முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். அகலமான வாயைக் கொண்டவர். சுதந்திரம் அடைவதற்கு அடைவதற்கு 6 மாதத்திற்கு முன் பிறந்தார். அதாவது 19.2.1947ல் தான் இவர் பிறந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த குமாரபாளையம் இவரது சொந்த ஊர். சிறந்த ஓவியராகவும் இருந்து தனது திறமையை அவ்வப்போது நிரூபித்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கிய போது இரட்டை இலை சின்னத்திற்கு ஓவியம் வரைந்தது இவர் தான். தினம் தினம் தீபாவளி, உறவுகள், சங்கமம், வள்ளி போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
எம்ஜிஆரின் குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் ஓவியராகப் பணியாற்றியுள்ளார். பணக்காரன், இதயவாசல், நடிகன், பாட்டுக்கு நான் அடிமை, திருமதி பழனிச்சாமி, சின்னத்தம்பி, தெய்வவாக்கு, அசுரன், சின்னமேடம், மாயாபஜார், வான்மதி, உள்ளத்தை அள்ளித்தால, நாட்டாமை, ராவணன், முறைமாப்பிள்ளை, வாலி, ஜோடி, பூமகள் ஊர்வலம், குட்லக், தை பொறந்தாச்சு, உன்னுடன், நடிகன், பாட்டாளி உள்பட பஞ்சுமிட்டாய் வரை 100க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் தாக்கப்பட்டதில் 2021ல் தனது 75வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.