டெல்லி கணேஷை விசு என்று நினைத்து பாராட்டித் தள்ளிய ரசிகர்… ஒரு நகைச்சுவை சம்பவம்…

by Arun Prasad |
Delhi Ganesh and Visu
X

Delhi Ganesh and Visu

டெல்லி கணேஷ் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வரும் டெல்லி கணேஷ், ஒரு மிகச்சிறந்த வில்லன் நடிகரும் கூட.

இவர் பாலச்சந்தர் இயக்கிய “பட்டின பிரவேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக ஆகிப்போனார். வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது டெல்லி கணேஷ் காமெடியிலும் கலக்க கூடியவர். “மிடில் கிளாஸ் மாதவன்”, “அவ்வை சண்முகி” ஆகிய திரைப்படங்களை அவரது காமெடி நடிப்பிற்கு உதாரணங்களாக கூறலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் டெல்லி கணேஷ், அவர் வாழ்வில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். விக்ரம் நடித்த “சாமி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தபோது ஒரு நாள் காலை டெல்லி கணேஷ் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தாராம். களைப்பாக இருக்கிறதென்று ஒரு ஓரத்தில் ஓய்வெடுக்க அமர்ந்திருக்கிறார். அப்போது ஸ்கூட்டரில் அவரை கடந்து சென்ற ரசிகர் ஒருவர் அவரை பார்த்துவிட்டு ஸ்கூட்டரை திருப்பிக்கொண்டு அவர் அருகில் வந்திருக்கிறார்.

“சார், நீங்களா? இங்க ஷூட்டிங்க்கு வந்திருக்கீங்களா?” என கேட்க, “ஆமாம்” என பதிலளித்திருக்கிறார் டெல்லி கணேஷ். அதன் பின் அந்த ரசிகர், “சார், நான் உங்க நடிப்புக்கு பெரிய ரசிகன் சார், உங்க படங்கள் நான் நிறையா பார்த்திருக்கேன் சார்” என்று உற்சாக மிகுதியில் கூறினாராம். அதன் பின்”சார், என் மனைவு உங்களோட பெரிய ரசிகை. அவள் கிட்ட நீங்க பேசனும்” என்று சொல்லி மொபைலை எடுத்து மனைவிக்கு தொடர்புகொண்டிருக்கிறார்.

“ஏய் லட்சுமி, உனக்கு பிடித்த ஒரு நடிகர் என் முன்னாடி இருக்கிறார். உனக்கு ரொம்ப பிடிக்கும், யார்ன்னு சொல்லு பார்க்கலாம். தெரியலையா? விசு சார்தான் என் முன்னாடி நிக்கிறார்” என தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். அதன் பின் மனைவியிடம் பேசச் சொல்லி மொபைலை டெல்லி கணேஷிடம் கொடுத்திருக்கிறார். அவரது மனைவியிடம் பேசிய டெல்லி கணேஷ், “நான் விசு இல்லை, டெல்லி கணேஷ்” என கூறிவுடன், அங்கே நின்றுகொண்டிருந்த ரசிகர், “அய்யோ சார், மன்னிச்சிடுங்க சார், நான் தெரியாம விசுன்னு சொல்லிட்டேன்” என கூறியிருக்கிறார். அதற்கு டெல்லி கணேஷ், “பரவாயில்லை” என்று கூறிவிட்டு அவரது மனைவியை நலம் விசாரித்துவிட்டு அந்த ரசிகரை அனுப்பிவைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்ட நடிகை; சரோஜாதேவிக்கு அடித்த லக்: அதிர்ஷ்டம் புகுந்து விளையாடிருக்கே!

Next Story