Connect with us

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை மீறி வெளியான படங்கள் – ஒரு பார்வை

Cinema History

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை மீறி வெளியான படங்கள் – ஒரு பார்வை

தாலியே தேவை இல்ல நீதான் என் பொஞ்சாதி…தாம்பூலம் தேவை இல்ல நீ தான் என் சரிபாதி என்று ஒரு சினிமாப் பாடல் உண்டு. 2007ல் வெளியான தாமிரபரணி படத்தில் தான் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பா.விஜய் எழுதிய பாடல். விஷால் நடித்த இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

பாடலுக்காக தான் இந்த வார்த்தை எழுதப்பட்டதே ஒழிய நிஜ வாழ்க்கையில் இது ஒத்து வராது. தமிழரின் தலையாய பண்பாடுகளில் கல்யாணம் என்றால் தாலி கட்டியே மாலை மாற்ற வேண்டும் என்று ஒரு நியதி உள்ளது. இது தான் பாரம்பரிய கலாசாரம். ஆனால் மேல்நாட்டு மோகம் இங்கும் பற்றிக்கொண்டதால் தாலியே தேவை இல்ல என்றாகிவிட்டது.

Thamiraparani

ஒரு சிலர் லிவிங் டுகதர், பதிவு திருமணம் என வாழ்க்கையில் புதுமை செய்கின்றனர். இதை சில சினிமாப் படங்களும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் இப்போது வந்ததில்லை. 40…50களிலேயே வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தாலி பெண்ணுக்கு சுமங்கலி என்ற உரிமையையும், மனைவி என்ற சமூக மதிப்பையும் தருகிறது. இந்த விஷயத்தைத் தான் பெரும்பாலான படங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் முற்போக்காக சில படங்கள் தாலி பெரிய மேட்டரே கிடையாது எப்படியும் வாழலாம் என்ற ரீதியில் வந்துள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜீவஜோதி

1947லேயே இந்த படம் வந்துவிட்டது. மேலை நாட்டில் கல்வி கற்று வந்த இளைஞன் ராமநாதன். இவன் தாலி கட்டாமல் மல்லிகா என்ற நவநாகரீகப் பெண்ணுடன் பதிவு திருமணம் செய்து கொள்கிறான். அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள் தான் படத்தின் கதை.

மோகனசுந்தரம்

1951ல் வெளியானது. மனைவியை இழந்த நாயகன் விவாகரத்து பெற்ற பெண்ணாகிய லீலாவதியைப் பதிவு திருமணம் செய்து கொள்கிறான். ஏன்…எதற்கு என்பதை படம் விளக்குகிறது.

பராசக்தி

Parasakthi

சிவாஜிகணேசனின் முதல் படம்…கலைஞர் கருணாநிதியின் வசனம்…இந்தப் படத்திலும் குணசேகரன் தன் காதலி விமலாவை தாலி கட்டாமல் தான் மாலை மாற்றி மணம் செய்து கொள்கிறான். படம் வெளியான ஆண்டு 1952.

ரத்தக்கண்ணீர்

எம்.ஆர்.ராதாவின் அசுரத்தனமான நடிப்பில் பட்டையைக் கிளப்பிய படம். இந்தப் படத்தில் கல்யாணம் எப்படி நடக்கும் என்பதை சுவாரசியமாகக் காட்டுவர். அதாவது மணமக்கள் இருவர் கையையும் இணைத்து வைத்து விடுவர். அவ்ளோ தான் திருமணம் முடிந்தது. என்ன ஒரு சிம்பிள் மேரேஜ்..?!

நல்ல தம்பி

தாலியோ, மாலையோ இல்லாமல் ஓர் அவையில் தனது காதலி ராணியை மனைவி என்று அறிவிக்கிறார் நல்லதம்பி. அவ்ளோ தான் கல்யாணம் கதம் கதம்…நல்ல தம்பி அவளை மணம் புரிந்தவன் ஆகிறான். எப்படி எப்படி எல்லாம் அந்தக்காலத்தில் சிந்தித்துள்ளார்கள் பார்த்தீர்களா? எல்லாம் மேலை நாட்டு மோகம் செய்யும் லீலைகள் தான்.

படித்த பெண்

1956ல் வெளியானது. படத்தில் கதாநாயகி சுலோசனா மணமான நாள் அன்றே தன் படிக்காத கணவன் சரவணனுடன் வாழ மறுத்து விடுகிறாள். விவாகரத்து பெற்றுத் தருமாறு தந்தையிடம் போராடுகிறாள்.

ஆனால் தந்தையோ மரபை மீற முடியாது என்றும் மகளைக் கண்டித்து கணவனுடன் சேர்ந்து வாழ் என கட்டாயப்படுத்துகிறார். ஆனால் மனைவியோ தாலி பெண்ணிற்கு சிறை எனக்கூறி அதைக் கட்டிய கணவனிடம் கழற்றி எரிந்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அப்புறம் நடந்தது என்ன என்பதே படத்தின் கதை.

சிறை

1984ல் வெளியான படம். ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். படத்தில் தன் கையாலாகாத கணவன் முகத்தில் தன் தாலியைக் கழற்றி விட்டெறிகிறாள் நாயகி. அதுமட்டுமின்றி தன்னைக் கெடுத்தவனைத் தேடி ஓடுகிறாள். இது எப்படி இருக்கு?

தன்னம்பிக்கை

இவ்வளவு ஏன்? தாலியைக் கேலி செய்த படங்களும் வந்துள்ளன. என்.எஸ்.கே. நடிப்பில் வெளியான தன்னம்பிக்கை என்ற படத்தில் ஒரு பாடல் உள்ளது. இதில் பல பல வகையாய் ஜாதிக்குத் தகுந்த உருவம் பெற்றது தாலி. பாரீஸ் லண்டன் அமெரிக்கா ஜப்பானில் தாலி என்றால் கேலி என்று ஒரு பாடலில் சொல்கிறார்கள்.

வீரக்கனல்

1960ல் வெளியான வீரக்கனல் படத்தில் தாலி ரொம்பவே கேலி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கணவன் தாலி கட்டியதும் சற்றும் தாமதிக்காமல் மனைவி கணவனுக்குத் தாலி கட்டுகிறாள். இதெப்படி இருக்கு?

அதுமட்டுமின்றி ஒரு பாடலும் பாடுகிறார்கள். போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் சேத்துப் போட்டுக்கணும்…உலகம் புதுசா மாறும்போது பழைய முறைய மாத்திக்கணும்…!

அலைபாயுதே

Alaipayuthe

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் தாலியை ஒளித்து வைத்து விளையாடுகிறார்கள். நாயகி இரவில் தூக்கத்தில் தாலியைக் கழட்டி வைக்கிறாள்.

கணவன் அதை ஒளித்து வைக்கிறான். எழுந்ததும் தாலியைக் காணாமல் தவிக்கிறாள் மனைவி. என்னங்கடா இதுவும் ஒரு விளையாட்டா என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தப்படம் 2000ல் வெளியாகியுள்ளது.

பிரியமானவளே

Priyamanavale

பிரியமானவளே படத்திற்காக நடிகர் விஜய், சிம்ரன் திருமணத்திற்கு முன் அக்ரீமெண்ட் செய்து கொள்வார்கள். அதன்படி விஜய் சொல்வது என்னன்னா, நீங்க சொல்ற பெண்ணைக் கல்யாணம் செய்துக்கிட்டு ஒரு வருஷம் அவ கூட வாழ்ந்து பார்ப்பேன்.

வருஷ முடிவுல அவளை என்னால மனைவியா ஏத்துக்க முடியலன்னா உதறிடுவேன்…அந்த பெண் தான் சிம்ரன். விஜய் சிம்ரன் திருமண பந்தம் நீடித்ததா என்பதே கதை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top