என் வாழ்க்கையை மாற்றியதே ரஜினி சார்தான்!.. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன அஜித்குமார்!..

Ajithkumar: ரஜினிக்கு எப்போது ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்பட்டதோ அப்போதே தத்துவார்த்தமான சிந்தனைகளும் அவருக்கு உருவானது. பல ஆன்மிக, தத்துவ புத்தகங்களை படித்தார். அது தொடர்பான நபர்களிடம் உரையாடினார். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு ஆன்மிகத்திற்கு போய்விடலாம் எனவும் ஆசைப்பட்டார். அதை தடுத்தவர் அவரின் குரு பாலச்சந்தர்.
இல்லையெனில் இந்நேரம் எங்கோ ஒரு மடத்தில் சாமியாராக இருந்திருப்பார். 80களில் இருந்தே தனது படங்களில் தத்துவம் நிறைந்த வசனங்களை பேச துவங்கினார். அவரின் எல்லா படங்களிலும் தத்துவ வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அண்ணாமலை, பாட்ஷா, முத்து உள்ளிட்ட பல படங்களிலும் தத்துவ வசனங்கள் தூக்கலாக இருக்கும்.
குறிப்பாக பாபா படம் முழுக்க தத்துவ வசனங்கள் நிறைய இடம் பெற்றிருக்கும் இருக்கும். அதுபோன்ற தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. அதனால்தான், அவர் கலந்துகொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளில் தத்துவம் நிறைந்த ஒரு குட்டிக்கதை சொல்வார்.
சினிமா என்பது ரஜினிக்கு தொழிலாக இருந்தாலும் அதை விட அவருக்கு ஆன்மிகத்திலும், தத்துவத்திலும் அதிக ஆர்வம் உண்டு என்பது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். தியானம், யோகா தொடர்பான பல ஆங்கில புத்தகங்களை படித்திருக்கிறார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவர் செய்வது இதுதான்.
இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் பேசிய அஜித்குமார் ‘என் வாழ்க்கையை அமைதியாக மாத்தியது சூப்பர்ஸ்டார்தான். என்னை அமைதிப்படுத்தியதும் அவர்தான். பல பிரச்சனைகள், குழப்பங்கள், காயங்களோடு நான் தவிச்சப்போ எனக்கு ‘Living With the Himalayan Masters' என்கிற புத்தகத்தை கொடுத்தார். என் வாழ்க்கையை மாத்திய புத்தகம் அது’ என சொல்லியிருக்கிறார்.
அஜித்தின் மனைவி ஷாலினி ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் சிறுமியாக நடித்திருப்பார். ஷாலினியை அஜித் திருமணம் செய்தபின் அஜித்தின் சில படங்கள் தோல்வி அடைந்தது. அப்போது ‘நீங்கள் பில்லா படத்தை ரீமேக் செய்து நடியுங்கள்’ என அஜித்திடம் சொன்னதே ரஜினிதான். இந்த படம் அஜித்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்து குறிப்பிடத்தக்கது.