Ilayaraja: எல்லோருக்கும் இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால், அவருக்குள் ஒரு கதாசிரியரும், திரைக்கதை ஆசியரும், இயக்குனரும் உண்டு என்பது பலருக்கும் தெரியாது. ஒரு படத்தில் பாடல் எங்கு வரவேண்டும் என்பதை சரியாக சொல்பவர் இளையராஜா.
இயக்குனரே அதை மிஸ் பண்ணி இருந்தாலும் இந்த இடத்தில் ஒரு பாடல் வரவேண்டும் என சொல்லி ஒரு பாட்டு போட்டு கொடுப்பார். அதுதான் ராஜா. அதனால்தான் 80,90களில் அவரின் பாடல்களையும், பின்னணி இசையையும் நம்பியே பல படங்கள் உருவானது. சில சமயம் அவர் போடும் டியூனில் இயக்குனருக்கு திருப்தி இருக்காது. ஆனால், அதை பாடலாக கேட்கும் போது அசந்து விடுவார்கள். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.
அதேபோல், ஒரு இயக்குனர் ஒரு காட்சியில் எந்த மாதிரியான உணர்வை ரசிகர்களுக்கு சொல்ல விரும்புகிறார் என்பதை புரிந்துகொண்டு மிகச்சரியாக அதை தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்திவிடுவார் இளையராஜா. அதனால்தான் ‘நான் படமெடுத்துவிட்டேன். இதை ஓட வைப்பது உங்கள் கையில் இருக்கிறது’ என மகேந்திரன், மணிரத்னம் போன்ற இயக்குனர்களே இளையராஜாவிடம் சொன்னார்கள்.
இளையராஜாவுக்கு படமே பிடிக்கவில்லை என்றாலும் கூட பின்னணி இசையை சிறப்பாகவே அமைப்பார். பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தின் கதை அவருக்கு பிடிக்கவில்லை. ஆனால், அந்த படத்தின் பின்னணி இசை அவ்வளவு உயிரோட்டமாக இருக்கும். அதேபோல் பாடல்கள் விஷயத்தில் இளையராஜா எடுக்கும் முடிவுகளும் மிகச்சரியாக இருக்கும். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் ஹேராம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை கவனித்துக்கொண்டவர் கமலின் அண்ணன் சந்திரஹாசன். ஹேராம் படத்தில் ஒரு இடத்தில் பாடல் காட்சி வைக்கலாம் என கமலிடம் சொன்ன இளையராஜா கல்காத்தாவை சேர்ந்த பாடகர் அஜய் சக்ரவர்த்தியை பாட வைக்காலம் என யோசித்திருக்கிறார். அவரின் தரப்பில் அணுகிய போது ஒரு லட்சம் சம்பளம் என சொல்லப்பட்டிருக்கிறது. இதை சந்திரஹாசனிடம் இளையராஜா சொல்ல ‘20 ஆயிரம் கொடுத்தால் இங்கே பாடுவார்கள். வேண்டாம்’ என சொல்லிவிட்டார்.
ஆனால், இளையராஜா தன்னை அழைத்ததை தெரிந்துகொண்ட அஜய் சக்ரவர்த்தி ‘நான் சென்னை வருகிறேன். எனக்கு சம்பளம் வேண்டாம். விமான செலவு, தங்கும் செலவு என எதையும் யாரும் கொடுக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டு நேராக இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டாராம். அவர் வந்துவிடவே அவருக்கு பாடலை சொல்லிக்கொடுத்து பாட தயாராகிவிட்டார். அதுதான் ‘இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே’ என்கிற பாடல்.
அப்போது அங்கு வந்த சந்திரஹாசனும், கமலும் அஜய் சகரவர்த்தி பாடியதை கேட்டு அசந்துபோய்விட்டார்களாம். அதிலும் சந்திரஹாசனின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டதாம். அஜய் சக்ரவர்த்தியின் குரலைக்கேட்ட சந்திரஹாசன் ‘இவருக்கு ஒரு லட்சம் என்ன.. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என சொல்லியிருக்கிறார். இந்த தகவலை இளையராஜாவே அவரின் இசைக்கச்சேரி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
