16 வயதினிலே பட தயாரிப்பாளர் பட்ட பாடு!.. காப்பாற்றிவிட்ட கமல்!.. ஒரு பிளாஷ்பேக்!...

Kamalhaasan: சினிமா எடுக்கும் ஆசையில் சிலர் அந்த துறைக்கு போவார்கள். அப்படிப்பட்டவர்களை பொறி போட்டு பிடித்து மொக்கை கதையை வைத்து படத்தை எடுத்து சம்பளத்தை வாங்கிகொண்டு ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்திவிட்டு சில இயக்குனர்கள் ஓடிவிடுவார்கள். பல வருடங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எல்லாம் ஒரே படத்தில் போய்விடும்.
சிலருக்கு அதிர்ஷ்டவசமாக முதல் படம் ஓடி லாபத்தை கொடுத்துவிடும். அந்த ஆசையில் சரியான இயக்குனர்களை தேர்ந்தெடுக்காமல் சில தோல்விப்படங்களை கொடுத்துவிட்டு சொத்துக்களை இழந்து வாடகை வீட்டில் வசிக்கும் பல தயாரிப்பாளர்கள் இப்போதும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். அப்படி சினிமா ஆசையில் படமெடுக்க வந்து பணத்தை இழந்த தயாரிப்பாளரை பற்றி பார்ப்போம்.
பாரதிராஜா இயக்கிய பதினாறு வயனிலே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே உள்ளிட்ட சில படங்களை தயாரித்தவர். இவர் பொள்ளாச்சி அருகேயுள்ள சேரிப்பாளையம் என்கிற ஊரை சேர்ந்தவர். தேங்காய் வியாரம் செய்து வந்த ராஜ்கண்ணு ஒருகட்டத்தில் டூரிங் டாக்கிஸ் உரிமையாளராக மாறினார்.
அப்போது திரைப்படங்களை தயாரித்து வந்த பொள்ளாச்சி ரத்தினம் என்பவரின் தங்கையைத்தான் ராஜ்கண்ணு திருமணம் செய்து கொண்டார். ஒருமுறை ரத்தினம் தயாரித்து தலைப்பிரசவம் என்கிற படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க போனார் ராஜ்கண்னு. அந்த படத்தில் உதவி இயக்குனராக சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த பாரதிராஜாவை அழைத்து நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். நான் தயாரிக்கிறேன் என சொல்ல மூன்று கதைகளை சொன்னார் பாரதிராஜா. அதில் மயிலு என்கிற கதை நன்றாக இருந்தது. அதுதான் பதினாறு வயதினிலே என்கிற பெயரில் உருவானது.
4.75 லட்சம் செலவில் அந்த படத்தை தயாரித்தார் ராஜ்கண்ணு. இந்த படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. எனவே, தானே துணிந்து வெளியிட்டார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை குவித்து ராஜ்கண்ணுவுக்கு லாபத்தை கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து பல படங்களையும் தயாரித்தார். 1981ம் வருடம் அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அது தோல்வியடைந்தது.
எனவே, கடனில் சிக்கினார். அவருக்கு உதவ பாக்கியராஜ் முன்வர எங்க சின்ன ராசா படம் உருவானது. ஆனாலும் முழுக்கடனையும் அடைக்க முடியவில்லை. நடிகர் ராஜேஷ் மூலம் ராஜ்கண்ணு கஷ்டப்படுவதை தெரிந்துகொண்ட கமல் ராஜ்கண்ணு தயாரிப்பில் மகாநதி படத்தில் நடித்தார். அதன்பின் கடனிலிருந்து மீண்டார் ராஜ்கண்ணு.