அப்பாவிடம் பொய் சொல்லி சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்!. அவரே சொன்ன பிளாஷ்பேக்!...

by சிவா |
அப்பாவிடம் பொய் சொல்லி சினிமாவுக்கு வந்த விஜயகாந்த்!. அவரே சொன்ன பிளாஷ்பேக்!...
X

Vijayaknth: சினிமாவில் வாய்ப்பு என்பது யாருக்கும் சுலபமாக கிடைத்துவிடாது. அதுவும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வரும்போது சினிமாவின் இரும்பு கதவுகள் திறக்கவே திறக்காது. பல இடங்களுக்கும் சென்று வாய்ப்பு கேட்டு அலைய வேண்டும். அப்போது அவமானத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தாலும் அதை பறிக்க பலரும் வருவார்கள். அந்த வாய்ப்பை தக்க வைக்க வேண்டும். இயக்குனரும், தயாரிப்பாளரும் நம்ப வேண்டும். பாதி படத்தில் ஹீரோவை மாற்றிய கதையெல்லாம் கோலிவுட்டில் நிறைய நடந்திருக்கிறது. மதுரையிலிருந்து சென்னை வந்த வாய்ப்பு தேடி அலைந்த விஜயகாந்தும் பல அவமானங்களை சந்தித்தார்.

அப்பாவின் ரைல்ஸ் மில்: இதுபற்றி பல வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘மதுரையில் என் அப்பாவின் ரைஸ் மில்லை நான் நடத்தி வந்தேன். என்னிடம் 100 பேர் வேலை செய்வார்கள். என்னை சின்ன முதலாளி என்றே அழைப்பார்கள். அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். ஏனெனில் என் அப்பா என்னை நல்லாவே வைத்திருந்தார்.

என் வீட்டில் மற்ற எல்லோரும் படித்து கொண்டிருக்க நான் படிப்பை விட்டுவிட்டு ரைஸ் மில்லை கவனித்து வந்தேன். சென்னை வந்து வாய்ப்பு கேட்டபோது எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இவர்கள் முன் நாம் நடித்து காட்ட வேண்டும் என நினைத்து நான் ஏறாத வாசல் இல்லை. எல்லா இடத்திலும் சுத்தினேன். அப்போது நான் தி.நகரில் பாண்டி பஜாரில் தங்கியிருந்தேன்.

சந்தித்த அவமானங்கள்: அங்கிருந்து ஜெமினி பாலம் வரை நடந்தே வருவேன். வரும்போது பவுடன் பூசிக்கொண்டு பஸ்ஸில் வருவேன். போகும்போது நடந்து போவேன். ஏனெனில் கொஞ்சம் ஃபிரஸ்ஸாக இருந்தால்தான் கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். நான் வசதியானவன் என தெரிந்துகொண்டு என்னிடம் பலரும் பணம் கேட்டார்கள். பல அசிங்கங்களை சந்தித்தேன்.

சின்ன முதலாளி: 100 பேர் என்னை சின்ன முதலாளி என அழைப்பதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு நாம் சாதித்துகாட்ட வேண்டும் என்கிற பிடிவாத குணம் என்னிடம் இருந்தது. இனிக்கும் இளமை படத்தில் வில்லன் கம் ஹீரோ என நடித்தேன். என்னை பலரும் துச்சமாக தூக்கி எறிந்தனர். ‘கருப்பா இருந்துட்டு நீ ஏன் சினிமாவுக்கு வர?. அதான் ஏற்கனவே இங்க ஒருத்தர் (ரஜினி) இருக்காரே’ என பேசுவார்கள். இப்படி பலரும் பேசி அவமானப்பட்டு என் மனம் கல்லாகி இறுகிபோய்விட்டது’ என சொல்லியிருக்கிறார்.

வேறு மொழி படங்கள்: மேலும், ‘வேறு மொழியில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன விஜயகாந்த் ‘முதலில் எனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது. அப்படி நடித்தாலும் காசுக்குதான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் காசுக்கு ஆசைப்பட்டது இல்லை. அதனால் அந்த ஆர்வம் வரவில்லை. கதைகளில் நான் தலையிட மாட்டேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் சில கருத்துக்களை சொல்வேன். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கட்டாயப்படுத்த மாட்டேன்.

ஆனால், வசனங்களில் தலையிடுவேன். குறிப்பாக துதி பாடுவது போன்ற வசனங்கள் வேண்டாம் என சொல்லிவிடுவேன். அது எனக்கு பிடிக்காது. சில நேரங்களில் சில கதைகளை நான் தேர்ந்தெடுப்பேன். சும்மா காதலித்தேன், டூயட் பாடினேன் என இல்லாமல் அதில் சமுதாயத்திற்கு சொல்வது போல ஒரு நல்ல கருத்து இருக்கிறதா என பார்ப்பேன்’ என பேசியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

Next Story