100 படங்கள் நடிக்கும் வரை கூரை வீட்டில் தங்கிய விஜயகாந்த்!.. யாருக்காவது தெரியுமா?!..

Vijayakanth: சினிமாவில் வெற்றி என்பது சுலபமில்லை. ஏனெனில், புதிதாக வரும் ஒருவருக்கு வாய்ப்பு என்பது சீக்கிரத்தில் கிடைத்து விடாது. பல இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்க வேண்டும். பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை மட்டும் போதாது. உழைப்பு, விடாமுயற்சியும் முக்கியம். அதோடு, சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கவேண்டும். அதனால்தான் அதை அதிர்ஷ்டம் என்கிறார்கள். அந்த நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
கேப்டன் விஜயகாந்தும் அப்படி காத்திருந்து, வாய்ப்பு தேடி அலைந்து, அவமானங்களை சந்தித்து சினிமாவுக்கு வந்தவர்தான். இனிக்கும் இளமை என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். பெரிதாக கிளிக் ஆகவில்லை. சில படங்களில் நடித்தாலும் ஓடவில்லை. அதன்பி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்கிற படத்தில் நடித்தார். அது அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் பல சறுக்கல்கள், ஏற்றம் என சந்தித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். விஜயகாந்தின் படங்கள் ரஜினி, கமல் படங்களை விட அதிக வசூல் செய்த சம்பவங்களும் நடந்தது. விஜயகாந்த் மிகவும் எளிமையானவர். அவரை சுலபமாக அணுக முடியும். ஆடம்பரத்தை விருப்பமாட்டார். என்ன உணவு கிடைத்தாலும் சாப்பிடுவார்.
இந்நிலையில், விஜயகாந்துடன் நெருங்கி பழகியவரும், தயாரிப்பாளருமான டி.சிவா ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘100 படம் முடியும் வரைக்கும் ஒரு கூரை கொட்டகையில்தான் கேப்டன் தங்கினார். அங்கு 20க்கு 15 அளவில் ஒரு பெட் இருக்கும். அதில் நான், விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தார் மற்றும் அவரின் சில நண்பர்கள் எல்லோரும் படுத்துக்கொள்வோம். ஷூட்டிங் முடிந்துவந்து அந்த பெட்டில் எங்கு இடம் இருக்கிறதோ அதில் படுத்து தூங்குவார்.
அவருக்கென தனி தலயணை, பெட் கிடையாது. 2 ரூபாய் சோப் மட்டுமே பயன்படுத்துவார். எந்த பார்ட்டிக்கும் போகமாட்டார். பிலிம்பேர் விருது கொடுப்பார்கள். அதை வாங்க கூட போகமாட்டார். எந்த பார்ட்டியிலும் கலந்துகொள்ளமாட்டார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர் சாப்பிட்டதே இல்லை. அதை ஒரு பாலிசியாகவே வைத்திருந்தார். தனது வாழ்நாளில் ஒரு பிராண்டட் டிரெஸ் கூட அவர் போட்டது இல்லை. என்ன சாப்பாடு, என்ன உடை என எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதே இல்லை. கல்யாணம் செய்த பின்னரே தனி வீட்டில் குடியேறினார். அவரை போல ஒருவரை பார்ப்பது அபூர்வம்’ என பேசினார்.