இந்திய சினிமாவின் முதல் பேன் இண்டியா நடிகர்!.. அப்பவே ஆயிரம் நாட்கள் ஓடிய கமல் படம்!..

by Murugan |
kamal
X

Kamalhaasan: கடந்த சில வருடங்களாகவே பேன் இண்டியா என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. அதாவது ஒரு மொழியில் உருவாகும் திரைப்படம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மாநிலங்களிலும் வெளியாகும். 80களிலேயே பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானதுண்டு. ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்கள் மொழி மாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியாகும்.

பாகுபலி2: ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் உருவானாலும் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. அப்போதுதான் பேன் இண்டியா என்கிற வார்த்தை பிரபலமானது. இந்த படத்தின் வெற்றி மூலம் பிரபாஸ் பேன் இண்டியா நடிகராக மாறினார்.

அதன்பின் அவரின் நடிப்பில் வெளியான சலார், சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், கல்கி என எல்லா திரைப்படங்களுமே பேன் இண்டியா படங்களாக வெளிவந்தது. அதேபோல் ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப், கேஜிஎப்2, காந்தாரா போன்ற படங்களும் பேன் இண்டியா படங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது. சமீபத்தில் புஷ்பா 2 படம் பல மொழிகளிலும் வெளியாகி 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.


கமல்ஹாசன்: இப்போது எல்லா பெரிய நடிகர்களுக்கும் பேன் இண்டியா ஸ்டார் ஆக வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. ஆனால், 80களிலேயே பேன் இண்டியா நடிகராக கமல் இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் அவர் நடித்தார். அந்த மொழிகளில் அவரே பேசினார். ஏனெனில் அந்த மொழிகள் அவருக்கு தெரியும். இப்போதுள்ள நடிகர்களை போல வேறு ஒருவர் டப்பிங் பேசவில்லை.

அதேபோல், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, பேசும் படம் போன்ற படங்கள் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டது. இதில் பேசும் படம் மட்டும் வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தது. கமலை வைத்து அப்போது பேன் இண்டியா படங்களை பாலச்சந்தர் இயக்கினார்.


மரோசரித்ரா: பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிதா, மாதவி ஆகியோர் நடித்து 1978ம் வருடம் வெளியான தெலுங்கு படம்தான் மரோசரித்ரா. இது தமிழிலும், கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளியாகி வரவேற்பை பெற்றது. சென்னையில் ஒரு தியேட்டரில் இப்படம் 2 வருடங்கள் மற்றும் 31 நாட்கள் அதாவது 596 நாட்கள் ஓடி ரசிகர்கள் கொண்டாடிய படமாக இது அமைந்தது. கர்நாடக மாநிலத்தில் இரண்டரை வருடங்கள் ஓடியது. இந்த படத்தை ஹிந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்கிற பெயரில் புதிதாக எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார் பாலச்சந்தர். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார். ஹிந்தியில் 80 வாரங்களுக்கு மேல் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியது.

மொத்தமாக பார்த்தால் இந்த படம் ஆயிரம் நாட்களை தாண்டி ஓடியிருக்கிறது. இப்போதெல்லாம் 3 வாரங்கள் ஓடினாலே வெற்றி என எல்லோரும் பேசும் நிலையில் 80களிலேயே பாலச்சந்தரும், கமலும் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரு பிரம்மாண்ட காதல் படத்தை கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்ததுதான் சினிமாவின் வரலாறு.

Next Story