மைக்கேல் மதன காமராஜன் படம் எங்கிருந்து சுட்டது தெரியுமா?!.. அட தெரியாம போச்சே!...

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்து 1990ல் வெளிவந்த திரைப்படம்தான் மைக்கேல் மதன காமராஜன். ஒரு பணக்காரருக்கு ஒரு பெண் மூலம் 4 குழந்தைகள் பிறக்கும். அவரின் சொத்தை அபகரிப்பதற்காக அவரின் தம்பி அவரின் காரை கீழே தள்ளி விபத்தை ஏற்படுத்தி அவர் இறந்துவிட்டார் எனக்காட்டிக்கொண்டு சொத்துகளுக்கு அதிபதி ஆகிவிடுவார்.
4 குழந்தைகளும் ஒவ்வொரு இடத்தில் வளர்வார்கள். மதன் அப்பாவின் வியாபாரத்தை பார்க்க, மைக்கேல் பணம் வாங்கிகொண்டு கொலை செய்யும் கூலிப்படையாக இருப்பார். காமு ஒரு ஐயர் வீட்டில் வளர்வார். ராஜு தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்வார். ரூபினி, ஊர்வசி, குஷ்பு ஆகியோர் ஜோடியாக நடித்திருப்பார்கள்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தோற்றம், உடல்மொழி மற்றும் குரலில் கூட வித்தியாசம் காட்டி நடித்திருப்பார் கமல். இளையராஜாவின் இசையில் சுந்தரி நானும் சுந்தரி நீயும் மற்றும் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
இப்போது வரைக்கும் இந்த படத்தை கமலும், சிங்கீதம் சீனிவாச ராவும் எப்படி எடுத்தார்கள் என்பது பல இயக்குனர்களுக்கே ஆச்சர்யம்தான். ஏனெனில், கிராபிக்ஸ் பெரிதாக இல்லாத காலத்திலேயே எல்லா கமலும் ஒரே இடத்தில் இருப்பது போல காட்சிகளை எடுத்து அசத்தி இருப்பார்கள்.
இந்நிலையில், ஒரு பாகிஸ்தான் மொழி படத்திலிருந்து உரிமை வாங்கியே இந்த படத்தை உருவாக்கினார்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஒன்றாக பிறந்த 4 பேர் பிரிந்துபோய் எப்படி சேர்ந்தார்கள் என்பதுதான் அந்த படத்தின் கான்செப்ட். அதை மட்டும் வைத்துக்கொண்டு காமெடி கலந்த சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து இப்போது வரை ஒரு கல்ட் கிளாசிக் படமாக எடுத்தார்கள்.

அந்த பாகிஸ்தான் மொழி படத்தின் கதையை மாற்றி, காமெடி காட்சிகளை வைத்து, கிரேஸி மோகனை வைத்து காமெடி வசனங்களை எழுதி இப்போதுவரை பலராலும் ரசிக்கும்படி இப்படத்தை உருவாக்கினார்கள். பாகிஸ்தான் மொழியில் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியது காதர் கஷ்மீரி என்பவர்தான். மைக்கேல் மதன காமராஜன் பட டைட்டிலில் கவனித்தால் மூலக்கதை காதர் கஷ்மீரி என்றே போடப்பட்டிருக்கும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் மைக்கேல் மதன காமராஜன் படத்திற்கு கதையை கொடுத்தற்காக தனக்கு 11 லட்சம் பணத்தை கமல் தரவில்லை என 2013ம் வருடம் வழக்கும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.