Cinema News
கமல்ஹாசனை உட்கார விடாமல் அலைக்கழித்த கௌதம் மேனன்… உலக நாயகனை கடுப்பேத்திப் பார்த்த படக்குழுவினர்…
கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. எனினும் இத்திரைப்படத்தில் நடிக்கும்போது இத்திரைப்படம் ஒரு குப்பை படமாக வரப்போகிறது என்றே நினைத்தாராம் கமல்ஹாசன்.
இது குறித்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல அரிய தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியது குறித்து இப்போது பார்க்கலாம்.
“வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தின் பல காட்சிகள் அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. அப்போது அங்கே கமல்ஹாசனையும் ஜோதிகாவையும் பல நாட்கள் நடக்க வைத்துக்கொண்டே இருந்தார்களாம். (வெண்ணிலவே பாடலில் அவ்வாறு இருவரும் நடந்துகொண்டே இருப்பார்கள்). ஆனால் அப்போது கமல்ஹாசன் “இவர்கள் என்ன நடக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என எண்ணினாராம். ஆதலால் மாணிக்கம் நாராயணனை தொடர்புகொண்டு “உன்னுடைய காசை இவனுங்க வீணடிச்சிட்டு இருக்காங்க, நீ உடனே அமெரிக்காவுக்கு கிளம்பி வா. இவுங்க ஒரு காட்சிகூட எடுக்கவில்லை” என கூறினாராம்.
எனினும் மாணிக்கம் நாராயணன், “எனக்கு கௌதம் மேனன் மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆதலால் கவலைப்படாதீர்கள்” என கூறினாராம். மற்றொரு நாள் கமல்ஹாசன், “எனக்கு உட்கார இருக்கைகளே போட மாட்டிக்கிறார்கள்” என கூறினாராம்.
அப்போது மாணிக்கம் நாராயணன், “எனது பையன் அமெரிக்காவில்தான் படிக்கிறான். அவனை சேர் எடுத்துக்கொண்டு வரச்சொல்கிறேன்” என கூறியிருக்கிறார். அதற்கு கமல்ஹாசன், “இல்லை, வேண்டாம். தேவையில்லாமல் செலவு வைக்காதே” என கூறியிருக்கிறார். அதற்கு மாணிக்கம் நாராயணன், “ஸார். நீங்க ஒரு லெஜண்டு. அதனால் உங்களை கம்ஃபோர்ட்டா வைத்துக்கொள்ள வேண்டியது எனது கடமை” என்று பதிலளித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து மாணிக்கம் நாராயணன், அமெரிக்காவில் உள்ள தனது மகனிடம் 4 சேர்களை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு போகச்சொல்லி “அங்கே கமல்ஹாசனை உட்கார வைத்து அவர் கூடவே பத்து நாட்கள் இரு, அவருக்கு வேண்டியதை செய்” என கூறியிருக்கிறார். அதன் பிறகு அவரது மகன் சேர்களை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றுள்ளார். படப்பிடிப்பு முடிந்த பின்பும் கமல்ஹாசனுக்கு இத்திரைப்படத்தின் மேல் நம்பிக்கையே இல்லையாம். எனினும் “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் பல பொருளாதார சிக்கல்களால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கு நஷ்டம் ஏற்பட்டதுவிட்டது என்பதுதான் சோகம்.