சினிமாவில் நடிப்பது மட்டுமில்லை. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, பைக்கில் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. சினிமா மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது போக நேரம் கிடைக்கும் போது அஜித் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்
பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டுவந்த அஜித் திருமணத்திர்கு பின் அதை நிறுத்தினார். அதன்பின் மனைவி ஷாலினியிடம் சம்மதம் பெற்று கடந்த சில மாதங்களாகவே அஜித் கார் ரேஸ்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். துபாயில் நடந்த முதல் போட்டியில் அஜித்தின் டீம் மூன்றாவது பரிசை வென்றது.

அதன்பின் சில ஐரோப்பிய நாடுகளில் போட்டி நடைபெற்றது. அதிலும் மூன்றாவது இடம். தற்போது மலேசியாவில் அவரின் டீம் விளையாடுகிறது. ஏற்கனவே இதை தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
ஒருபக்கம் அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரியை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். அஜித் கார் ரேஸுக்கு தயாராவது, கார் விபத்தில் சிக்குவது, சக வீரர்களுடன் ஆலோசிப்பது என கார் ரேஸ் தொடர்பான அஜித்தின் எல்லா செயல்பாடுகளையும் அவர் வீடியோவாக பதிவு செய்து வருகிறார். விரைவில் இந்த டாக்குமென்டரி வெளியாக வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் இந்த டாக்குமெண்டரிக்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகியிருக்கிறது. அஜித் டாக்குமென்டரி தொடர்பான வீடியோவை பகிர்ந்து ‘ மீண்டும் ஏகே சாருடன் இணைவது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் ஏ.எல் விஜய் மற்றும் சுரேஷ் சந்திரா சார் இருவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டு இருக்கிறார் ஜி.வி பிரகாஷ். அஜித்தின் குட் பேட் அக்லிக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.