கோட் சூட் போட ஆசைப்பட்டு கோட்டை விட்ட ராமராஜன்!.. பசுநேசனின் உச்சமும் வீழ்ச்சியும்!...
சினிமா எனும் குதிரையில் ராஜமரியாதையோடு சில வருடங்கள் வலம் வந்தவர் ராமராஜன். நாடகங்களில் சிறு வேஷம், தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை, ஆபிஸ் பாய், உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என ராமராஜனின் கிராப் பலரும் அறியாதது. 90களில் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு டஃப் கொடுத்த நடிகர் இவர்.
டவுசர் அணிந்து, தலையில் துண்டை கட்டிக்கொண்டு மக்கள் நாயகனாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர். ரஜினிக்கு முன்பே தமிழ் சினிமாவில் முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கியவர் ராமராஜன் என்பது பலருக்கும் தெரியாது. திரைவாழ்வில் அவரின் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றி இங்கே பார்ப்போம்.
இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா
ராமராஜனுக்கு அவரின் அப்பா வைத்த பெயர் குமரேசன். அவரின் அப்பா ராமய்யா ஒரு நாடக நடிகர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி மதுரை மேலூருக்கு குடி பெயர்ந்தார். குமரேசனுக்கு சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம். அதோடு, அந்த பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சில நாடகங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சினிமா ஆசையில் சென்னை போக விரும்பினாலும் அங்கு யாரின் ஆதரவில் இருப்பது என்பது தெரியவில்லை. எனவே, மேலூரில் இருந்த ராஜா எனும் தியேட்டரில் மாதம் 22 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். டிக்கெட் கிழிப்பது, மேனேஜர் வேலை, கேசியர், ஆபரேட்டர் என எல்லா வேலையும் செய்திருக்கிறார் குமரேசன். அந்த சம்பளம் போதவில்லை என்பதால் கணேஷ் என்கிற தியேட்டரில் மாதம் 90 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது தியேட்டரில் ஓடும் எம்.ஜி.ஆர் படங்களை மிகவும் ஆர்வத்துடன் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் உடைகளை பார்த்து நாமும் இதுபோல கலர் கலராக உடைகளை அணிந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதன்பின் சென்னை வந்து இயக்குனர் இராம நாராயணனிடம் உதவியாளராக சேர்ந்து சுமார் 30 படங்களில் வேலை செய்திருக்கிறார். இதில் சில படங்களுக்கு கதை, வசனமும் எழுதி இருக்கிறார்.
இதையும் படிங்க: தியேட்டரில் டிக்கெட் கிழித்த குமரேஷன் முதல் ராமராஜன் எம்.பி. வரை!.. சாமானியனின் சாதனை!..
பாண்டியன், இளவரசி ஆகியோரை வைத்து மண்ணுக்கேத்த பொண்ணு என்கிற படத்தை இயக்கிதான் சினிமாவில் அறிமுகமானார். குமரேசன் ராமராஜன் ஆனார். அதன்பின் 4 படங்களை இயக்கினார். ஆனால், காலம் இவரை நடிகராக மாற்றியது. டவுசர் அணிந்து நடித்தே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ரஜினி, விஜயகாந்த், கமல் போன்றவர்கள் நகரத்து பின்னணியில் நடிக்க ஆர்வம் காட்டியதால் கிராமத்து ஹீரோ என்கிற இடத்தை பிடித்தார் ராமராஜன். குறைந்த பட்ஜெட். அதிக லாபம் என்பதால் தயாரிப்பாளர்களை அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.
தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். ஒரே நேரத்தில் 40 படங்களில் நடிக்க ஒப்பந்தமான ஒரே ஹீரோ அது ராமராஜனாகத்தான் இருக்க முடியும். இளையராஜா இருக்கிறார். கவுண்டமணி செந்தில் காமெடி இருக்கிறது. கதை சுமாராக இருந்தால்போதும் படம் ஓடிவிடும் என கணக்கு போட்டார் ராமராஜன். அதேநேரம் வக்கீல், துப்பறியும் போலீஸ், புரட்சியாளர் என அவர் நடித்த படங்கள் ஓடவில்லை. ராமராஜன் கோட் சூட் அணிந்தாலோ, கொள்கை பேசினாலோ ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
90களுக்கு பின் ராமராஜனின் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சில படங்களை இயக்கி நடித்தார். அப்படத்திலும் லாபம் கிடைக்கவில்லை. அதன்பின் அரசியல் பக்கம் சென்றார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இப்போது சாமானியன் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். ராமராஜனின் 2வது இன்னிங்ஸ் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.