பேங்க் மேனேஜர் டு பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்!.. லோகேஷ் கனகராஜின் சக்சஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என கடகடவென கோலிவுட்டின் டாப் இயக்குநர்கள் வரிசையில் லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஈஸியாக வந்து விட்டார் என பலர் அவரது காதுபடவே கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.
ஆனால், பேங்க் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் தனக்குள் இருக்கும் திறமையையும் சினிமா ஆர்வத்தையும் அறிந்து கொண்டு எப்படி யாரிடமும் உதவி இயக்குநராக கூட இல்லாமல் சினிமாவில் இயக்குநராக சாதித்தார், அவரது சாதனைக்கு பின்னால் உள்ள வலி எந்தளவுக்கு ஆழமானது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
சிறுவயது முதலே கமல் படங்கள் தான் லோகேஷ் கனகராஜை ரொம்பவே ஈர்த்து வந்தன. சத்யா, விக்ரம் மற்றும் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களின் விசிஆர் கேசட்டுகளை வாடகைக்கு அடிக்கடி வாங்கி திரும்பத் திரும்ப பார்ப்பாராம்.
அப்படி இந்த சின்னப் பையன் இந்த மூன்று படங்களின் கேசட்டுகளையும் மட்டுமே வாடகைக்கு வாங்குறானே ரொம்ப பிடிச்சு போச்சு போல என நினைத்த அந்த கடைக்காரர், இந்தப்பா இந்த மூன்று படங்களையும் நீயே வச்சிக்க என பரிசாகவே கொடுத்து விட்டாராம்.
அங்கேயே லோகேஷ் கனகராஜ் ஒரு சினிமா இயக்குநராக மாறும் விதை போடப்பட்டு விட்டது.
சினிமாவில் ஆர்வம் இருந்தாலும், குடும்ப சூழல் காரணமாக எம்பிஏ தான் இவரால் படிக்க முடிந்தது. லயோலா கல்லூரிக்குச் சென்று விஸ்காம் படிக்க முடியவில்லை.
படித்து விட்டு ஒரு வங்கியில் ஊழியராக சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தார். திருமணமும் ஆகி விட்டது. ஆனால், அவருக்குள் இருந்த அந்த இயக்குநர் ஒவ்வொரு நாள் இரவும் அவரை தூங்க விடாமல் உன் இலக்கு இதுவல்ல அதை நோக்கி ஓடு என கனவில் கன்னத்திலேயே அறைந்து சொல்ல, குறும்படங்களை இயக்கி பார்க்கலாம் என முடிவெடுக்கிறார்.
முதல் முதலாக அவரது வங்கியில் உள்ள உயரதிகாரி தான் அவருக்கு 3000 ரூபாய் பணம் கொடுத்து ஷார்ட் ஃபிலிம் எடுக்க சொல்கிறார். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பக்கம் அவர் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் தைரியமான ஒரு முடிவை எடுக்கிறார். தான் எடுத்த முடிவை தனது மனைவியிடம் சொல்ல, நான் வேலைக்குப் போய் பார்த்துக்கிறேங்க, நீங்க உங்க கனவை சேஸ் பண்ண போங்க, என அந்த பெண் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு பக்க பலமாக மாறுகிறார்.
களம் எனும் இவர் எடுக்கும் குறும்படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதை தனது அவியல் ஆந்தாலஜி படத்தில் இணைத்துக் கொள்கிறார்.
அந்த குறும்படம் தான் மாநகரம் படத்திற்கான தயாரிப்பாளரை லோகேஷ் கனகராஜிடம் கொண்டு வந்து சேர்த்தது. மாநகரம் படம் டக்குன்னு உருவான படம் அல்ல, 2011ம் ஆண்டு முதல் அதற்கான வேலைகளை ஆரம்பித்து, 2017ம் அண்டு தான் திரைக்கு அந்த படம் வந்தது.
மாநகரம் படத்திற்கு பிறகு உடனடியாக கார்த்தியை வைத்து கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை. மன்சூர் அலி கானை வைத்து எடுக்கவே கைதி படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அந்த படம் எங்கு சென்று சேர வேண்டுமோ, லோகேஷ் கனகராஜை எங்கு கொண்டு வந்து அமர வைக்க வேண்டுமோ அத்தனை மேஜிக்கையும் அது லோகேஷ் கனகராஜின் மொத்த உழைப்பையும், எத்தனையோ தூங்காத இரவுகளையும் வாங்கிக் கொண்டு அதற்கெல்லாம் அவர் ஃபிட்டானவர் என்பதை உணர்ந்த பிறகே அவருக்கு கொடுத்திருக்கிறது.
மாநகரம் வெற்றி, கைதி உருவாகி வருவதை பார்த்தே தளபதி விஜய் நம்பி மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். மாஸ்டர் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இயக்கி இன்று 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக மாற உள்ள படத்தை கொடுத்திருக்கிறார் என்றால் அவரது சக்சக்கான சீக்ரெட் இந்த மூன்று விஷயங்கள் தான்.
- தன்னம்பிக்கை – இயக்குநராக நம்மால் மாற முடியும் என்கிற தன்னம்பிக்கையில் வேலையை விட்டு சினிமாவுக்காக முயற்சி செய்தது.
- தைரியம் - மனைவியிடம் தனது இலக்கை தைரியமாக சொல்லி, அவரது உதவியை பெற்றுக் கொண்டு தனது கனவை நனவாக்க சென்றது.
- திருப்தி – தான் எழுதும் விஷயங்கள், தான் எடுக்கும் படங்கள் தன்னை முதலில் திருப்தி படுத்த வேண்டும் என்பதை தீவிரமாக நம்பியது. இயக்குநருக்கே திருப்தி இல்லை என்றால், படத்தை பார்க்கும் ரசிகர்கள் எப்படி திருப்தியடைவார்கள் என நினைத்தது தான்.
இந்த மூன்று குணாதிசயங்கள் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கான ரகசியம். இதை தொடர்ந்து கடை பிடித்துக் கொண்டே இருந்தால், அடுத்தடுத்தும் வெற்றிகளை குவிப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.