பேசுவது கிளியா... காதல் பாடல் உருவானது இப்படித்தான்! எம்.ஜி.ஆருக்கு சாதகமான கவிஞரின் லாவகமான வரிகள்!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சரோஜாதேவி சேர்ந்து நடித்த படம் பணத்தோட்டம். இந்தப் படத்தின் போது எல்லாம் சரோஜாதேவியை ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்றே செல்லமாக அழைப்பார்கள். அவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தமிழ் அந்தக் காலத்தில் ரொம்பவே பிரபலம். அந்தப் படத்தில் ஒரு அருமையான காதல் பாடல் வரும். அது தான் பேசுவது கிளியா என்ற பாடல்.
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். அவர் எம்ஜிஆருக்கும், சரோஜாதேவிக்குமான டூயட் பாடலாக இதை எழுதினார். எம்ஜிஆர் சரோஜாதேவியின் அழகை வர்ணித்துப் பாட வேண்டும். அதே வேளையில் சரோஜாதேவி எம்ஜிஆரின் பெருமையை பறைசாற்ற வேண்டும்.
சரோஜாதேவி நடந்து சென்றால் அவரது நடையைப் பார்ப்பதற்காகவே அவரது பின்னழகைக் காட்டுவார்கள். அந்தக்காலப் படங்களில் எல்லாம் இது ரொம்பவே பிரபலம். ரசிகர்களின் ரசனையைத் தூண்டுவதற்காகவே இந்த யுக்தியை இயக்குனர்கள் கையாண்டனர்.
நடக்கும்போது வளைந்த நெளிந்து செல்லும் அவரது உடல் அமைப்பும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, நளினமாக இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் கவிஞர் ரொம்பவே ரசித்து எழுதிய பாடல் தான் இது. 'பேசுவது கிளியா, இல்லை பெண்ணரசி மொழியா... கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க்கொடியா' என கண்ணதாசன் எழுதினார். பாடலின் இடையில் பல சுவாரசியமான விஷயங்களைச் சொல்லியிருப்பார் கவிஞர்.
எம்ஜிஆர் கொடை வள்ளல் என்பது ஊரறிந்த விஷயம். அவர் கேரள மேனன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைய கேரளா அன்றைய சேர நாடு. ஆனால் எம்ஜிஆர் வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே தமிழகத்தில் தான். அதனால் சரோஜா தேவி இப்படிப் பாடுகிறார்.
பாடுவது கவியா, இல்லை பாரி வள்ளல் மகனா... சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா... என்று பாடல் வரிகள் வரும். இந்த வரிகளை சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு காதல் பாடல் போலத் தான் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால் தான் எல்லாமே புரியும். இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகு எம்ஜிஆர் அந்தப் பாடல் வரிகளைக் கேட்டு புன்னகைத்தார். அடுத்த சில நாள்களில், ஒரு ஸ்டூடியோவில் கவிஞர் கண்ணதாசனைப் பார்த்தார் எம்ஜிஆர்.
என்ன கவிஞரே... சேரனுக்கு உறவா? என்று கேட்டார். ஆமா... பாரி வள்ளல் மகன். அவர்தான் செந்தமிழர் நிலவு என்று சொன்னார். அதுதான் கவியரசர் கண்ணதாசன். அவர் இப்படி சொன்னதும் எம்ஜிஆர் சிரித்து விட்டார்.
கவிஞர்கள் பாடல் எழுதுவது என்பது சாதாரண விஷயம். ஆனால் அதனுள் கால சூழலுக்கு ஏற்ப தன் கருத்தையும் கலப்பதற்கு ஒரு திறமை வேண்டும். அதற்கு தைரியமும் வேண்டும். அதே போல அதை ஏற்றுக் கொள்வதற்கு எம்ஜிஆர் போன்ற நல்ல மனமும் வேண்டும். இந்தப் பாடலில் மொத்தமும் கலவையாக இருந்ததால் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.