சுஹாசினி ஹீரோயினான கதை தெரியுமா... நெஞ்சத்தைக் கிள்ளாதே ரகசியம்!
இயக்குநர் மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தைக் கிள்ளாதே படம்தான் நடிகையாக சுஹாசினி அறிமுகமான படம். ஆனால், நடிகையாக வேண்டும் என்று எப்போதுமே ஆசைப்படாத சுஹாசினி ஹீரோயினானது நிச்சயம் ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்... வாங்க அந்த சுவாரஸ்யத்தைத் தெரிஞ்சுக்கலாம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவராக மகேந்திரன் உருவெடுத்திருந்த சமயம் அது. நான்கு படங்களை அவர் இயக்கி முடித்திருந்தார். அப்போது தயாரிப்பு நிறுவனமான தேவி பிலிம்ஸில் ஒரு கதையைச் சொல்லி ஒப்புதலும் பெற்றிருந்தார். அந்தப் படத்தில் நடிக்க புதுமுகங்கள் வேண்டும் என்பதால், தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்தது. இங்கு எதுவுமே திருப்தியடையாத நிலையில், மும்பை சென்று நாயகன், நாயகிக்கான புதுமுகங்களை இயக்குநர் மகேந்திரன் தேடிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் அதிகாலை தனது ஹோட்டல் அறையின் ஜன்னலைத் திறந்தபோது டிராக் சூட், டீசர்ட் அணிந்து ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். இது அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இன்றுக்கு உடல்நலனுக்காக ஓடும் அந்த இளம் பெண் நாளை எதெற்கெல்லாம் ஓட வேண்டி வரும் என்று சிந்திக்கத் தொடங்கி அதை அடிப்படையாக வைத்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். இந்த புதிய கதையை தயாரிப்பு தரப்பிடம் சொல்லி அதற்கான ஒப்புதலையும் பெற்றிருக்கிறார். இதிலும் புதுமுகங்களை நடிக்க வைக்க வேண்டும் என்று தேடத் தொடங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: இவ்ளோ கொடூரமானவரா…? 9 மாத கர்ப்பிணிக்கு தொல்லை கொடுத்த மணிரத்னம்…!
அப்போது ஜானி படத்தையும் இயக்குநர் மகேந்திரன் இயக்கிக் கொண்டிருந்தார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக் குமார். அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்தார் சுஹாசினி. மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்திருக்கிறது. அந்த செட்டில் துறுதுறுப்பாக அவர் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்த மகேந்திரனுக்கு அவரை ஹீரோயினாக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இதுபற்றி அசோக்குமார் மூலம் சுஹாசினியிடம் எடுத்துச் சொன்னபோது, அவர் உடனடியாக மறுத்துவிட்டாராம். சுஹாசினியின் தந்தை சாருஹாசன் மகேந்திரனின் குடும்ப நண்பர்.
இதனால், அவர் மூலமாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுஹாசினி, ஒரே ஒரு படம்தான் நடிப்பேன். பிடிக்காவிட்டால் பாதியிலேயே விலகிவிடுவேன் என்கிற நிபந்தனையோடு நடிக்க வந்திருக்கிறார். இப்படித்தான் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறார் சுஹாசினி. அதேபோல், ஹீரோவாக மோகன் தேர்வானதும் சுவாரஸ்யம்தான்.
பாலு மகேந்திராவின் கோகிலா படத்தில் கமலின் நண்பராக நடித்திருந்த மோகன் மீது மகேந்திரனின் பார்வை படவே, அவரை இந்தப் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கனவே மூடுபனி படத்தில் மோகன் நடித்திருந்தாலும் நாயகன் அந்தஸ்துக்கு அவர் நடித்த முதல் படம் இதுதான். அவர்தான் மைக் மோகன் என்று பின்னாட்களில் புகழ்பெற்ற நடிகராக மாறியவர். இப்படி சுஹாசினி, மோகன் என இரண்டு பேரின் திரைப்பயணத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த படம்தான் நெஞ்சத்தைக் கிள்ளாதே.