'பிரியமானவளே' லேடி கெட்டப்புக்கு விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் தெரியுமா?
இயக்குநர் செல்வபாரதி - விஜய் கூட்டணியில் கடந்த 2000-த்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் படைத்த படம் பிரியமானவளே... அந்தப் படத்தின் ஒரு சீனில் பெண் வேடமிட்டு விஜய் நடித்திருப்பார். ஆரம்பத்தில் பெண் வேடமிட விஜய் ஒப்புக்கொள்ளவில்லையாம். பின்னர், எப்படி ஒப்புக்கொண்டார் தெரியுமா?
சுந்தர்.சியிடம் பணியாற்றியவர் செல்வபாரதி. அவரின் பல படங்களைத் தனது வசனம் மூலம் மெருகேற்றியவர் விஜய்யின் நல்ல நண்பராகவும் இருந்தார். இருவரும் இணைந்து ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதன்படி தெலுங்கில் வெங்கடேஷ் - சௌந்தர்யா நடித்திருந்த பவித்திர பந்தம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தனர். ஆனால், தெலுங்குப் படத்தில் நாயகனின் பிம்பம் எதிர்மறையாக இருக்கும்.
கதை பிடித்திருந்தாலும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கவா என விஜய் யோசித்திருக்கிறார். அதைப் புரிந்துகொண்ட செல்வபாரதி, தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். அது விஜய்க்கும் பிடித்துப் போகவே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டுத் திரும்பும் பணக்கார இளைஞன், ஒரு ஆண்டு திருமணம் என்கிற ஒப்பந்தப்படி திருமணம் செய்துகொள்ள நினைப்பார். பொருளாதாரரீதியாகக் கஷ்டத்தில் இருக்கும் நாயகி அதை ஒப்புக்கொள்வார். இந்த ஒரு வரிக் கதையை உணர்வுப்பூர்வமான திரைக்கதை, விஜய் - சிம்ரன், எஸ்.பி.பி உள்ளிட்டோரின் அட்டகாச நடிப்பில் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. விஜய் ரசிகர்களின் ஆதர்ஸமான படங்கள் பட்டியலில் பிரியமானவளே படத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
படத்தின் ஒரு காட்சியில் விஜய் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அந்த வேடத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் செல்வபாரதி அவரிடம் சொன்னபோது, ஆரம்பம் முதலே தயங்கியபடியே இருந்திருக்கிறார். அந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்றே விஜய் நினைத்தாராம். படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது விஜய்யின் மனைவி சங்கீதா தலைப்பிரசவத்துக்காக லண்டனில் இருந்த தாய்வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது மனைவியுடன் இருக்கலாம் என்று விஜய்யும் லண்டன் சென்றார். இதனால், விஜய் இல்லாத காட்சிகளை இயக்குநர் செல்வபாரதி எடுத்தார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் பிரசவம் நடக்காத நிலையில், மேலும் சில நாட்கள் லண்டனில் தங்கியிருக்க நினைத்த விஜய் அதை இயக்குநரிடமும் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போதும் பிரசவம் நடக்காததால் லண்டனில் இருந்து கிளம்பி படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டாராம். இங்கு வந்த பிறகு விஜய் நடிப்பில் ஜூன் ஜூலை மாதத்தில் பாடலின் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அந்த சூழலில் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்த தகவல், அவருக்கு வந்திருக்கிறது. இதனால், மகிழ்ச்சியில் இருந்த விஜய்யிடம் அந்த நேரம் பார்த்து பெண் வேடம் பற்றி பேசி இயக்குநர் செல்வபாரதி சம்மதம் பெற்றிருக்கிறார். அதன்பிறகே, விஜய் அந்த லேடி கெட்டப்பில் நடித்துக் கொடுத்தாராம். இயக்குநர் செல்வபாரதி இதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.