More
Categories: Cinema News latest news

தடைகளை மீறி வெளிவந்த விஜய் திரைப்படங்கள்… அடேங்கப்பா!! லிஸ்ட் பெருசா போகுதே…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு, ஷாம், சங்கீதா ஆகியோர் நடித்து வருகின்றனர். “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Varisu

“வாரிசு” திரைப்படம் தெலுங்கில் “வரசுடு” என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி (தமிழ்நாட்டில் பொங்கல் தினம் போல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது) தினத்தை முன்னிட்டு வெளிமாநில திரைப்படங்களை வெளியிடக்கூடாது என “வாரிசு” திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

Advertising
Advertising

இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சில இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

எனினும் விஜய் திரைப்படங்களுக்கு இவ்வாறு எதிர்ப்புகள் கிளம்புவது என்பது முதல்முறை அல்ல. பல காலமாக இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வாறு எந்தெந்த விஜய் திரைப்படங்களுக்கு இது வரை எப்படி எப்படியெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்

புதிய கீதை

Puthiya Geethai

கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய், மீரா ஜாஸ்மின், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “புதிய கீதை”. இத்திரைப்படத்தை கே.பி.ஜெகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு முதலில் “கீதை” என்று டைட்டில் வைக்கப்பட்டது. விஜய் படத்திற்கு “கீதை” என்று டைட்டில் வைக்ககூடாது என இந்து அமைப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இத்திரைப்படத்திற்கு “புதிய கீதை” என பெயர் மாற்றப்பட்டது.

காவலன்

Kaavalan

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய், அசின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காவலன்”. இத்திரைப்படத்தை சித்திக் இயக்கியிருந்தார். அந்த ஆண்டு பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாளன்று தமிழகம் முழுவதும் படம் வெளியாக தாமதம் ஆனது. விஜய் அதற்கு முன் நடித்திருந்த “சுறா” திரைப்படம் தோல்வியடைந்திருந்த நிலையில் அதற்கான நஷ்ட ஈடு தொகையை கொடுத்த பிறகுதான் “காவலன்” படம் வெளியானது.

துப்பாக்கி

Thuppakki

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “துப்பாக்கி”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இஸ்லாமிய மதத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது. அதே போல் “கள்ளத்துப்பாக்கி” என்ற திரைப்படத்தை இயக்கிய படக்குழுவினர், “துப்பாக்கி” படத்தின் டைட்டிலை மாற்றக்கூறி வழக்கு தொடுத்தனர்.

தலைவா

Thalaivaa

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய், அமலா பால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தலைவா”. இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு முதலில் “தலைவா டைம் டூ லீட்” என டைட்டில் வைக்கப்பட்டது. இத்திரைப்படம் வெளியானால் எதிர்ப்பு தெரிவிப்போம் என குறிப்பிட்ட கட்சியினர் கூறி வந்தனர். மேலும் இத்திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாம் வைக்கப்படும் என மிரட்டல் வந்தது. ஆதலால் இத்திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் “டைம் டூ லீட்” என்ற வாசகம் மட்டும் நீக்கப்பட்டு இத்திரைப்படம் வெளியானது.

கத்தி

Kaththi

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய், சமந்தா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கத்தி”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தினர் அப்போதைய இலங்கை அதிபரான ராஜபக்சேவின் உறவினர் என கூறி பல அமைப்புகள் இத்திரைப்படத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலி

Puli

கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “புலி”. இத்திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியான நாளில் வருமான வரித்துறையினர் விஜய் மற்றும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரின் வீட்டில் சோதனை நடத்தியதால் “புலி” திரைப்படம் வெளியாக தாமதமானது.

மெர்சல்

Mersal

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மெர்சல்’. இத்திரைப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகிய மத்திய அரசின் நடவடிக்கைகளை குறித்து விமர்சித்தவாறு சில வசனங்கள் இடம்பெற்றிருந்ததால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்க்கார்

Sarkar Vijay

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “சர்க்கார்”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி வழக்குத் தொடுத்தார் உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரன்.

மாஸ்டர்

Master

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது விஜய்யின் அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Published by
Arun Prasad