
Flashback
முதல் பாடலுக்கே இளையராஜாவுக்கு டெஸ்ட் வச்ச வாலி… தேறினாரா? புட்டுக்கிச்சா?
இளையராஜாவும் வாலியும் இணைந்து கொடுத்த பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டுகள்தான். தமிழ்சினிமாவில் இவர்களது காம்போ வெற்றிக்கூட்டணி. இவர்கள் முதலில் சந்தித்தது எப்படி? இளைராஜாவுக்கு வாலி என்ன பரீட்சை வைத்தார்னு பார்க்கலாமா…
முதன் முதலில் எல்.வி.பிரசாத் தயாரிப்பில் ‘பிரியா விடை’ என்ற ஒரு படத்தில் இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார். 1975ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீகாந்த். முத்துராமன், பிரமிளா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பாலிவுட்டில் பிரபலமான ஒரு பாடலை தம் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் நினைத்தாராம்.
அப்போது பாலிவுட்டில் இரட்டை இசைஅமைப்பாளர்களாக பெயர் பெற்றவர்கள் லட்சுமிகாந்த், பியரிலால். அவர்களது இசையில் உருவான அந்தப் பாடலை பிரியாவிடையில் கொண்டு வரவேண்டும். அது சீட்டுக்கட்டு பேக் ரவுண்டில் உருவான பாடல். அதற்கு கவிஞர் வாலி பாடல் எழுத வேண்டும் என்று நினைத்துப் பேசி விட்டார்.
அதன்படி வாலி இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் போய் டியூன் கேட்க அதற்கு அவரோ வேறு ஒரு இசை அமைப்பாளரின் டியூனைப் போய் தாம் போடுவதா என்று நினைத்து அசிஸ்டண்ட் உள்ளே இருக்கான். அவனைப் போய் பாருங்கன்னு சொல்லிவிட்டாராம். அங்கு இளையராஜா சிறு பையனாக இருந்துள்ளார். வாலி அவரிடம் போய் டியூனைக் கேட்க அவரும் போட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் பாடல் வரிகள் வாலிக்கு பிடிபடவில்லை. ரொம்பநேரமா யோசித்துப் பார்த்து விட்டு இளையராஜாவிடம் உன் பேரு என்னப்பான்னு கேட்டுருக்கிறார்.
உடனே ராஜான்னு சொல்ல, ‘ராஜா பாருங்க. ராஜாவைப் பாருங்க’ன்னு பாட்டெழுதி விட்டார். அந்தப் பாடலுக்கு மட்டும் இளையராஜா தான் கம்போசிங் செய்தார். அப்படி பிரபலமானவர் தான் இளையராஜா. அதன்பிறகு அன்னக்கிளி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி வெற்றிகரமாகக் காலடி பதித்தார் இளையராஜா. அதன்பிறகு ‘பத்ரகாளி’ படத்திற்கு இளையராஜா தான் இசை அமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. பாடல் எழுத வாலி வருகிறார்.

pathrakali
அவருக்கோ இளையராஜா மேல் நம்பிக்கை இல்லை. தன் பாடலுக்கு இந்த சின்ன பையன் எப்படி டியூன் போடுவான்? ஒரு படத்தில் ஹிட் கொடுத்தால் போதுமா என்றெல்லாம் யோசித்தாராம். உடனே இளையராஜாவுக்கு டெஸ்ட் வைப்பது என முடிவு செய்துள்ளார். அதன்படி ‘கிளாசிக்கல் மியூசிக்ல அதாவது கர்நாடக இசையில பரிச்சயம் இருக்கா’ன்னு கேட்க ‘ஓரளவு இருக்கு’ன்னு இளையராஜா சொன்னாராம். அப்புறம் ‘தியாகராஜரோட கீர்த்தனைகள் தெரியுமா’ன்னு கேட்டுருக்காரு.
அப்போ ‘ஓரளவுக்குத் தெரியும்ணா’ன்னு சொல்லிருக்காரு. ‘ஓரளவுக்குன்னா என்னப்பான்னு கேட்டுட்டு திருப்பதி கோயில்ல திரை விலகும்போது ஒரு தெலுங்கு கீர்த்தனை பாடுவாங்களே… அது தெரியுமா’ன்னு கேட்டுருக்காரு. ‘ஓரளவுக்குத் தெரியும் அண்ணா’ன்னு சொல்லிருக்காரு. உடனே ‘எனக்கு அது தெரியணும் அல்லவா. பாடிக் காட்டு பார்க்கலாம்’னு சொல்லவும் சுதி பிசகாமல் பாடுகிறார் இளையராஜா.
அவருக்கு வாலி தனக்கு டெஸ்ட் தான் வைக்கிறார் என்பது தெரிந்து விட்டது. இளையராஜா பாடியதும் அசந்து போனார் வாலி. உடனே படத்திற்கும் பாட்டு எழுதினார். அப்படி உருவான பாடல்தான் ‘கேட்டேளே அங்கே.. அதைப் பார்த்தேளே இங்கே’ என்ற சூப்பர்ஹிட் பாடல். இந்தப் பாடலில் வாங்கோண்ணா என்ற வார்த்தையை அங்கங்கே சேர்த்தது இளையராஜாதானாம்.