Cinema History
இசையா மொழியா என்பதல்ல விஷயம்… இது அதையும் தாண்டி… கேட்டுப்பாருங்க… சும்மா ‘ஜிவ்’வுன்னு இருக்கும்..!
வழக்கம்போல இசையா, மொழியா என்று நாம் சர்ச்சைக்குள் சிக்கப்போவதில்லை. அதையும் தாண்டி இசையா, மொழியா அல்லது குரலா என்று தான் இந்தப் பாடலில் நாம் பார்க்கப் போகிறோம். அந்தக் காலகட்டத்தில் காதல் கடிதத்திற்காகக் காத்திருப்பது ஒரு இன்பமான அவஸ்தை. கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல். படம் கோழி கூவுது. பூவே இளைய பூவே என்ற இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். சில்க் சுமிதா ஒரு காதல் கடிதத்தை நினைத்து ஏங்கித் தவிப்பது போன்ற பாடல். பாடலாசிரியர் வைரமுத்து.
இந்தப் பாடலில் புல்லாங்குழல், ஸ்ட்ரிங்ஸ் இசை நச்சென்று இருக்கும். பாட்டை ஆரம்பிக்கும்போது மலேசியா வாசுதேவன் லேசாக ஆரம்பிப்பார். இந்தப் பாடலின் பல்லவியில் ரொம்ப உச்சத்தைத் தொடுபவர் மலேசியாவாசுதேவன். மலர் மீது தேங்கும் தேனே என்று பாடும்போது திடீரென எனக்குத் தானே என ஹைபிட்சில் பாடியிருப்பார்.
சரணத்தில் ஒரு காதலியின் கூந்தல் பற்றிப் பாடுகையில் குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே என்று அற்புதமாக வைரமுத்து எழுதியிருப்பார். அடுத்த வரிகளில் விழியிரண்டும் கடலானதே, எனது மனம் படகானதே என்று உச்சத்தைத் தொடும் வகையில் எழுதியிருப்பார். அடுத்ததாக இளம் பளிங்கு நகம் சேர்த்ததே. நிலவு அதில் முகம் பார்த்ததே என பாடலின் உச்சமாக எழுதி அசத்தியிருப்பார் கவிப்பேரரசர்.
இந்த வரிகளைப் பார்க்கும் போது நிலவு இவளது நகங்களில் முகம் பார்க்கிறது என்றால் நிலவு இவளை விட சின்னதாகி விட்டதே என்று ஆச்சரியப்படுத்தியிருப்பார். அடுத்த சரணத்தில், இளஞ்சிரிப்பு ருசியானது. அது கனிந்து இசையானது. குயில் மகளின் குழலானது. இருதயத்தில் மழை தூவுது என்று அசத்தியிருப்பார். இருபுருவம் இரவானது. இருந்தும் என்ன வெயில் காயுது என்று இல்பொருள் உவமை அணியைப் பாடலில் கொண்டு வந்திருப்பார்.
இதையும் படிங்க… ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழாப்படங்கள்… பட்டையைக் கிளப்பிய டாப் ஸ்டார்..!
அதாவது இரவில் வெயில் இருக்காது. இருந்தும் எப்படி புருவங்கள் வெயிலில் காயுதுன்னு அப்படி ஒரு ரசனை குறையாமல் எழுதியிருப்பார். இசையா, மொழியா, குரலா என எதையும் நாம் குறைத்து சொல்ல முடியாத அற்புதமான பாடல் இது. பாடலில் வரும் கோரஸ்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அற்புதமாகக் கொண்டு வந்து இருப்பார் இசைஞானி இளையராஜா.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.