ப்ளாஷ்பேக்: சரக்கே தேவையில்ல… போதை ஏற்றும் இளையராஜா பாடல் இதுதாங்க! அட அந்தப் படமா?

by sankaran v |   ( Updated:2025-04-16 06:23:44  )
ilaiyaraja
X

ilaiyaraja

மது குடிக்காத போதையை நிரந்தரமா அனுபவிக்கலாம். பணம் கொடுக்காம அனுபவிக்கலாம். இந்தப் போதையால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா மனசுக்குள்ள ஒரு ஏகாந்த மனநிலையை அனுபவிக்கலாம்.

அப்படி ஒரு வித்தியாசமான பாடல்தான் இது. இசைஞானி இளையராஜா, கவிப்பேரரசர் வைரமுத்து, எஸ்.ஜானகி மூவரின் கூட்டணியில் உருவான பாடல் இது. இப்ப இவங்க இணைந்தா கூட இப்படி ஒரு பாட்டைக் கொடுக்க முடியாது. அவ்வளவு ஏகாந்தத்தைத் தரும் இந்த அற்புதப் பாடல்.

'இன்று நீ நாளை நான்' என்ற படத்தை மேஜர் சுந்தரராஜன் தயாரிக்கிறார். இளையராஜா 3 மெட்டுகள் போடுகிறார். வைரமுத்து 3 பாடல்களை எழுதுகிறார். அதுல ஒண்ணுதான் 'பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்' பாடல்.

இது ஒரு வித்தியாசமான திரைப்படம். பெரிய அளவில் ஓடவில்லை. லட்சுமியும், சிவகுமாரும் காதலிக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக லட்சுமிக்கும், சிவகுமார் அண்ணன் ஜெய்சங்கருக்கும் திருமணம் நடக்கிறது. ஜெயசங்கர் இறந்து போகிறார். கணவர் இறந்த பிறகு லட்சுமியும், சிவகுமாரும், ஒரு மழை நேரத்துல சந்திக்கிறாங்க. தன்னோட காம தாகத்தை முன்னாள் காதலனுக்குத் தெரியப்படுத்தணும்.

இந்தப் பாடலை இளையராஜா வைரமனோகரி ராகத்துல பாடியிருப்பார். இந்தப் பாடலில் ஜானகி அம்மா ஹம்மிங்ல கிறங்கடிப்பாங்க. அதே போல செனாய் என்ற கருவியைக் கொண்டு இளையராஜா அற்புதமாக இசை அமைத்திருப்பார். மிருதங்கம், கடசிங்காரி, சந்தூர், புல்லாங்குழல் ஆகிய கருவிகளையும் அற்புதமாகப் பயன்படுத்தி இருப்பார் இசைஞானி.

பேஸ் கித்தார் இந்தப் பாடலில் பேசும். வரிகளில் கவிப்பேரரசர் காதல், காமம், நிலைக்குமா? எதிர்கால அச்சம் எல்லாவற்றையும் அருமையாகக் கொண்டு வந்திருப்பார். 'மழை செய்யும் கோளாறு. கொதிக்குதே பாலாறு. இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா? இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா?' என்ற வரிகள் ஆழமானவை. அற்புதமானவை.

சிவகுமாருக்கும் திருமணம் ஆகிடுச்சு. லட்சுமிக்கும் திருமணமாகி கணவர் இறந்து விடுகிறார். இவர்களுக்குள் ஒரு சட்டம் உள்ளது. அதைத் தாண்டி விடுவார்களா என்பதுதான் இந்தப் பாடலின் அர்த்தம். தாண்டுனா ரெண்டு பேருக்கும் மகிழ்ச்சி. ஆனால் சமுதாயம் காரித் துப்பும். அதே போல அடுத்த சரணத்தில் 'தங்கத் தாமரை, மலர்ந்த பின்பு மூடுமோ, பட்டுப் பூங்கொடி, படர இடம் தேடுமோ?' என்ற வரிகள் வருகிறது.

அடுத்த வரி இதுதான். 'மலர்க் கணை பாயாதோ? மதுக்குடம் சாயாதோ?' என பெண்ணின் முழுமையான விரகதாபத்தைப் பற்றி சொல்லி இருப்பார். அடுத்த வரியில் இந்த 'வெள்ளை மல்லிகை தேவகன்னிகை தானமா?' என அசத்தி இருப்பார் வைரமுத்து. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story