அந்த விஷயத்துக்காக மூணு நாளா பட்டினி கிடந்த இளையராஜா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ilaiyaraja
Ilaiyaraja: இசைஞானி என்று சொன்னதும் நமக்கு இளையராஜா தான் நினைவுக்கு வருவார். இசையை ரசித்து ரசித்து அவர் படங்களுக்கு இசை அமைக்கிறார். அதனால் தான் நாமும் அவரது இசையில் உருவான பாடல்களை ரசிக்க முடிகிறது. அவர் அடிக்கடி சொல்வது இதுதான். ஒரு ரசிகன் என்ற கண்ணோட்டத்தில் தான் நான் இசை அமைப்பேன். அது பாமரனுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கணும்.
என்னோட பாடல் வரிகளும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்வார். அந்த வகையில் சாதாரண கிராமத்தானாக இருந்து இசையில் ஊறி அதை அணுஅணுவாக ரசித்துக் கற்றுக் கொண்டு இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் சிம்பொனியை அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார் இளையராஜா.
இது சாதாரண விஷயம் அல்ல. அவரைப் பார்த்து இளைஞர்கள் சாதிக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் சரி. அதை முறைப்படிக் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற்றால் சாதனை படைத்துவிடலாம். இந்த 83 வயதிலும் இளையராஜா இளைஞர் மாதிரி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் என்றால் அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளது.
இளையராஜா சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தன்னோட இளமைகாலத்தில் நடந்த பல விஷயங்களை சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் சொன்ன தகவல்கள்தான் இவை.
அகாடமி ஆரம்பிச்சா அதுக்குத் தகுந்த ஆள் வந்து சேரணும். வயலின் எப்படி பிடிக்கணும்கறதைக் கத்துக்க மட்டும் 6 மாசம் ஆகும். அப்படின்னா யாரு வருவா? யாரும் வர்றது இல்ல. அப்படி வந்தாலும் அவங்ககிட்ட இசையைக் கத்துக்க ஆர்வம் இருக்கணும். அதுக்கு அவங்க தகுந்த பாத்திரத்தோடு வரணும். அப்படி வந்து கத்துக்கிட்டாங்கன்னா அவங்களோட திறமை வெளிப்படும். வெறும் ஏஐ மட்டும் கத்துக்காம இன்ஸ்ட்ரூமண்ட்ஸ்களை எப்படி பயன்படுத்துவதுன்னும் கத்துக்கணும்.
ஆரம்பத்துல நாங்க எல்லாம் இசையைக் கத்துக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். அது எப்படின்னா அது ஒரு ஜாலியான கஷ்டம். 3 நாளா பட்டினியா கிடந்துருக்கோம். அப்போ எல்லாம் பசி தெரியும். ஆனா பட்டினி தெரியாது. அப்போ நவராத்திரி காலகட்டம். ஒவ்வொரு கடையிலும் நிறைய சுண்டல் எல்லாம் கொடுப்பாங்க.
அதை பை நிறைய வாங்கி வச்சிக்குவோம். அதை ரூமுக்குக் கொண்டு வந்து மொத்தமா ஒரு பழைய பேப்பர்ல கொட்டி வச்சிடுவோம். பக்கத்துல தண்ணீர் நிறைய ஒரு ஜக்ல வச்சிடுவோம். அதை மட்டுமே சாப்பிட்டு பசியாறுவோம். இடையிடையே தண்ணீரைக் குடிச்சிக்குவோம். அப்படி ஜாலியா உட்கார்ந்து இசையைக் கத்துக்குவோம். அப்படித்தான் நான், அண்ணன், கங்கை அமரன்னு எல்லாரும் கத்துக்கிட்டோம் என்கிறார் இளையராஜா.