தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 80களில் பல படங்களுக்கும் இசையமைத்தார். இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவின் இசையை நம்பி அப்போது பல திரைப்படங்களும் உருவானது. அப்போது முக்கிய நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், ராமராஜன், சத்யராஜ், கார்த்திக் போன்ற பல நடிகர்களும் தங்களின் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவை நம்பியிருந்தனர். அதேபோல், இயக்குனர்களும் இளையராஜாவி நம்பியிருந்தார்கள்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைப்பதிலும் இளையராஜா வல்லவர். இயக்குனரால் சொல்ல முடியாத உணர்வுகளை கூட இளையராஜா தனது பின்னணி இசையின் மூலம் ரசிகர்களுக்கு கடத்தி விடுவார். அதுதான் அவரின் சிறப்பு. இப்போதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இசையமைப்பது மட்டுமல்லாமல் இளையராஜா பல படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதிலும் பல ஆன்மிக பாடல்களும் அடக்கம்.

பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அந்த படத்தில் அவர் எழுதிய ‘பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இளையராஜா ‘ஒருநாள் இரவு தூக்கத்திலிருந்து எழுந்து விட்டேன்.. பாத்ரூம் போயிட்டு வந்து பார்த்தால் இரண்டு மணிதான் ஆகுது.. ஆனா 5 மணி மாதிரி மனசுல ஒரு உணர்வு.. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே.. என வார்த்தை வருகிறது..
உடனே பேப்பர் எடுத்து எழுத தொடங்கினேன்.. அந்த பாட்டுல வந்த வார்த்தைகள் நான் யோசித்து எழுதுன வார்த்தைகள் கிடையாது.. தானா வந்த வார்த்தைகள். ஐந்து நிமிடங்களில் அந்த பாடலை எழுதி முடித்துவிட்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.




