எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்… எல்லாம் அந்த ஒரு படத்தால் வந்ததுதான்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ஜெய்சங்கர், சிவாஜி கணேசனுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால் ஜெய்சங்கர், எம்.ஜி.ஆருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அத்திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனபோது இருவருக்குள்ளும் சிறு கருத்து முரண் ஏற்பட்டதாம். அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு தாய் மக்கள்
1971 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஒரு தாய் மக்கள்”. இத்திரைப்படத்தை பா.நீலகண்டன் இயக்கியிருந்தார். ஆனால் இத்திரைப்படத்தில் முத்துராமன் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்தது ஜெய்சங்கரைத்தான். அதே போல் இத்திரைப்படத்தை முதலில் இயக்கியது கே.சங்கர் என்பவர்.
ஹிந்தியில் ராஜேந்திர குமார் நடிப்பில் வெளிவந்த “ஆயி மிலன் கி பேலா” என்ற திரைப்படத்தை ரீமேக் செய்ய நினைத்தார் எம்.ஜி.ஆர். இத்திரைப்படத்தில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஜெய்சங்கர் ஒப்பந்தமானார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிப்பதில் மிகவும் உற்சாகத்துடன் இருந்தாராம்.
படத்தில் இருந்து விலகிய ஜெய்சங்கர்
மேலும் இதில் ஜெய்சங்கர்தான் நடிக்க வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இருந்ததாம். எம்.ஜி.ஆரே விருப்பப்படுகிறார் என்பதால் அந்த படத்தில் ஜெய்சங்கர் ஆவலோடு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
முதல் நாள் படப்பிடிப்பிற்கு ஜெய்சங்கர் சென்றார். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொன்னார்களாம். ஆனால் மதியம் 12 மணி ஆகியும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். ஜெய்சங்கர் அந்த சமயத்தில் 8 திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாராம்.
எம்.ஜி.ஆர்-ஜெய்சங்கர் விரிசல்
இத்திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பையே இப்படி தாமதிக்கிறார்களே, இதே போல் சென்றால் தான் ஒப்பந்தமான மற்ற திரைப்படங்களில் தன்னால் ஈடுபாடு காட்ட முடியாதே என்ற பயம் ஜெய்சங்கருக்கு வந்ததாம். ஆதலால் அப்போது இத்திரைப்படத்தை இயக்குவதாக இருந்த கே.சங்கரிடம் சென்று தனது காரணத்தை கூறி, அத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம் ஜெய்சங்கர்.
அதன் பிறகுதான் ஜெய்சங்கர் கதாப்பாத்திரத்தில் முத்துராமன் ஒப்பந்தமானார். அதே போல் பின்னாளில் இயக்குனர் கே.சங்கரும் இத்திரைப்படத்தில் இருந்து விலக நேரிட்டதாம். அதன் பின் பா.நீலகண்டன் இத்திரைப்படத்தின் இயக்குனராக ஆனார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் எம்.ஜி.ஆருக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே சிறிது விரிசல் ஏற்பட்டதாம். ஆனால் பின்னாளில் மீண்டும் நட்புடன் பழக தொடங்கிவிட்டார்களாம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே நடிகை இவங்கதானாம்… ரொம்ப தைரியம்தான்!..