கோட் திரைப்படத்திற்குப் பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு செல்வதால் இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படமே எனது கடைசி படம் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் ஜனநாயகன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஜனநாயகன் அவரின் Farewell படம் என்பதால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் செண்டிமெண்டாக பார்த்தார்கள். இந்த படம் ஜனவரி 9ம் தே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் படம் வெளியாகவில்லை.
சென்சார் அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு U/A சான்றிதழ் கொடுப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் திடீரென மறு தணிக்கை என சொன்னதால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பான வழக்கில் படத்துக்கு சென்சார் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். ஆனால் உடனடியாக சென்சார் போர்ட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இந்த வழக்கு வருகிற 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம்.. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் இந்த மாத இறுதிக்குள் ஜனநாயகன் வெளியாகும் எனத்தெரிகிறது.



