விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படம் அந்த தேதியில் வெளியாகவில்லை. ரிலீஸ் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு படத்தை மறுத்தணிக்கை செய்ய வேண்டும்.. அதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா படத்திற்கு உடனே தணிக்கை சான்றிதழை கொடுங்கள் என தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உடனே மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த போது தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்ற மறுத்துவிட்டது. ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது இங்கே வர தேவையில்லை.. அங்கே உங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் இங்கே வரலாம்’ என சொல்லிவிட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.. அப்போது தணிக்கை வாரியம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கில் வருகிற 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால் 29ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரம் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் ஜனநாயகன் பட ரிலீஸ் மேலும் தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.