
திரைத்துறையில் நடிகையாக களமிறங்கி முன்னணி நடிகையாக மாறி எம்.ஜி.ஆருடன் பல படங்களிலும் நடித்து, எம்.ஜி.ஆர் அதிமுகவை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்து, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியவர் ஜெயலலிதா. எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை தனது கையில் எடுத்து அந்த கட்சியை தமிழ்நாட்டில் வளர செய்தவர்.
தமிழக அரசியலில் ஆளுமை மிக்க ஒரு தலைவராகவும் ஜெயலலிதா பார்க்கப்பட்டார்.. குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பிடித்த அரசியல்வாதியாக ஜெயலலிதா இருந்தார். பிப்ரவரி 24ம் தேதியான இன்று அவரின் 78வது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாள் தொடர்பான ஒரு செய்தியை பார்ப்போம்..
ஜெயலலிதா எம்ஜிஆருடன் முதன் முதலாக ஜோடி போட்டு நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தவர் நம்பியார். அதன்பின் நம்பியார் நடித்த பல படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். நம்பியார் மீது ஜெயலலிதாவுக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. நம்பியார் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்.. சினிமாவில் வில்லன் என்றாலும் நிஜ வாழ்வில் ஒரு ஹீரோவுக்கான குணங்களை கொண்டவர்.. அதனாலாயே அவரை ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடிக்கும்.

ஜெயலலிதா சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை அவரை தனது வீட்டுக்கு வரவழைத்து டைனிங் டேபிளில் அமர வைத்து வெள்ளித்தட்டில் உணவு பரிமாறினார் நம்பியார். அப்படி ஒரு கவுரவத்தை நம்பியார் தனக்கு கொடுத்ததை ஜெயலலிதா மறக்கவில்லை. அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சரான பின் அவரின் பிறந்தநாளன்று அவரை வாழ்த்துவதற்காக நம்பியார் தனது மனைவியுடன் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டிற்கு சென்றிருந்தார்
அப்போது நம்பியாரையும் அவரின் மனைவியையும் டைனிங் டேபிளில் அமரவைத்து வெள்ளி தட்டில் உணவு பரிமாறியிருக்கிறார் ஜெயலலிதா.. அதோடு ‘நீங்கள் ஒருநாள் உங்கள் வீட்டில் இதே மாதிரி வெள்ளித்தட்டில் எனக்கு சோறு போட்டீங்க.. ஞாபகம் இருக்கா?.. அதுக்கு பதில்தான் இது’ என்று சொல்லி சிரித்தாராம். இதில் மனம் மகிழ்ந்த நம்பியார் தனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரிடத்திலும் ‘அம்மு (ஜெயலலிதா) எதையும் மறக்கல. எல்லாவற்றையும் அப்படியே ஞாபகம் வச்சிருக்கு’ என்று சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.