விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சுதாகொங்கரா இயக்கியுள்ளார். முதலில் ஜனவரி 14-ம் தேதிதான் பராசக்தி வெளியாவதாக சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை ஜனவரி 10ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் முக்கிய உறவினர் என்பதாலும், இந்த படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதாலும் வேண்டுமென்றே ஜனநாயகனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்கிறார்கள். பராசக்திக்கு முக்கிய தியேட்டர்களை பெற்றுவிடுவார்கள். ஒரு தியேட்டரில் 2 காட்சி ஜனநாயகனும், 2 காட்சி பராசக்தியும் திரையிடுவார்கள்.

இதனால் ஜனநாயகன் வசூலை குறைக்கவும், அந்த படத்தின் காட்சிகளை குறைக்கவும் வேண்டுமென்றே இதை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள்
. ஆனால், சமீபத்தில் பேட்டிகொடுத்த சுதாகொங்கர ‘இதற்கு அரசியல் பின்னணியில் எந்த காரணமும் இல்லை’ என்று கூறியிருந்தார்.
பராசக்தி திரைப்படம் விஜய் படத்தோடு மோதுவது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள் சமூகவலைதளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக திட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் இதற்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ.. ஆனால் அவர் இதில் சிக்கியிருக்கிறார்.

இந்நிலையில் சீரியல் நடிகரும் சமீபத்தில் தவெகவில் இணைந்தவருமான நடிகர் ஜீவா ரவி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘ஜனநாயகன் படத்தோட பராசக்தி வருவது எங்களுக்கு ஜாலியாதான் இருக்கு.. ஏன்னா எல்லாருக்கும் தெரியும் ஜனநாயகன் படம்தான் எல்லாரும் பார்ப்பாங்க.. ஆனா சிவகார்த்திகேயன் நினைச்சா பாவமா இருக்கு.. ஏன்னா அவர் பேரு இதுல தேவை இல்லாம இழுத்து விட்டாங்க.. அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை.. நல்ல மரியாதையான ஆளு..
அவருக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல.. இது இரண்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு இடையே நடக்கிற பிரச்சனைதான்.. இருந்தாலும் இதுல ஒரு அரசியல் இருக்கு’ என்று பேசியிருக்கிறார்.
