ஒரே கதையை படமாக்க முயன்ற மூன்று டாப் இயக்குனர்கள்… அப்படி என்ன தான் கதை அது..?
தமிழ் சினிமாவில் ஒரு நாவலையோ அல்லது ஒரு சிறுகதையையோ திரைப்படமாக உருவாக்குவது தற்போது அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பாலா, வெற்றி மாறன் ஆகியோர் இதனை மிக தீவிரமாக கையில் எடுத்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” என்ற நாவலை தழுவி “நான் கடவுள்” என்ற பெயரில் திரைப்படமாக்கினார் பாலா. அதே போல் எழுத்தாளர் இரா.முருகவேள் மொழிப்பெயர்த்த “எரியும் பனிக்காடு” என்ற நாவலை தழுவி தான் “பரதேசி” திரைப்படத்தையும் இயக்கினார்.
மேலும் பூமணி எழுதிய “வெக்கை” என்ற நாவலை தழுவி “அசுரன்” என்ற திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். மேலும் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து தான் வெற்றிமாறன் “விடுதலை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கும் மேல் மணி ரத்னம் “பொன்னியின் செல்வன்” நாவலை பெரும் முயற்சி செய்து படமாக்கியுள்ளார். இவர்கள் மட்டுமல்லாது இதற்கு முன் தமிழ் சினிமாவில் பலரும் இலக்கியத்தை தழுவி படமாக்கியிருக்கிறார்கள்.
இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் கூட ஜெயமோகன் எழுதிய “ஐந்து நெருப்பு” என்ற கதையை தழுவி தான் கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “கைதிகள்” என்ற சிறுகதையை மூன்று டாப் இயக்குனர்கள் படமாக்க முயன்றுள்ளனர். முதலில் மணிரத்னம் ஜெயமோகனிடம் கேட்டிருக்கிறார், அதன் பின் பாலாவும் வெற்றிமாறனும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மூவருக்கும் முன்பே ரஃபீக் என்ற நபர் அந்த கதையை ஜெயமோகனிடம் இருந்து வாங்கி படமாக்கியுள்ளாராம்.
ஜெயமோகன் எழுதிய “கைதிகள்” சிறுகதை இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான சிறுகதை ஆகும். ஒரு பொதுவுடைமை போராளியை என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளும்போது போலீஸாக இருக்கும் கதாப்பாத்திரத்தின் மனநிலையே இந்த கதையின் சாரம். இந்த கதையை தான் மூன்று டாப் இயக்குனர்கள் படமாக முயன்றுள்ளனர்.