Cinema History
இசைஞானிக்கு செக் வைத்த இயக்குனர் சிகரம்…! எந்தப் படத்தில் தெரியுமா? அட அது சூப்பர்ஹிட் பாடலாச்சே..!
இசை உலகில் தனி சாம்ராஜ்யத்தைப் படைத்தவர் இளையராஜா. ஆனால் அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கும் பாலசந்தர் செக் வைத்த தரமான சம்பவம் நடந்துள்ளது.
படத்தில் ஹீரோ கர்நாடகத்தில் கீர்த்தனை பாடுகிறான். அதை கதாநாயகி ரசிக்கிறாள். அதே வேளையில் இதைத் தமிழிலேயே பாடலாமே என கேட்கிறாள். அதைக் கண்டு அகங்காரம் கொண்ட நாயகன் நீயே பாடேன் பார்க்கலாம் என்று சவால் விடுகிறான். அந்த நிமிடமே கதாநாயகி பாட ஆரம்பிக்கிறாள்.
அதுதான் ‘பாடறியேன், படிப்பறியேன்’ என நாட்டுப்புறப் பாடலாகிறது.
அதே பாடலில் கதாநாயகி தன் மனதுக்குள் கிடக்கும் அத்தனை ஆசைகளையும் கொட்டித் தீர்க்கிறாள். ‘தங்கமே நீயும் தமிழ்பாட்டும் பாடு’ என்று கோரிக்கை வைக்கிறாள். அதே நேரம் நாட்டுப்புறப்பாட்டு மட்டுமல்ல. எனக்கு ஸ்வரம் பாடவும் தெரியும் என்று ஹீரோவின் சவாலை ஜெயித்துக் காட்டுகிறாள். பாடலின் கடைசியில் ‘மரி மரி நின்னே’ என்ற கீர்த்தனையில் முடித்திருப்பார்.
இயக்குனர் சிகரம் தனது அபார சிந்தனைத்திறனால் தான் இத்தகைய தன்னிகரற்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளார். இல்லாவிட்டால், இப்படி ஒரு அற்புதமான பாடல் பிறந்து இருக்காது. ஒவ்வொரு இயக்குனரும் சொல்லும் சூழலுக்கு ஏற்ப தான் ஒரு பாடல் உருவாகிறது. அந்தப் பாடல் சிறப்பாக வர இதுவே மூலகாரணம். அப்படி ஒரு சூழல் கிடைத்தால் இளையராஜாவும் சும்மா இருப்பாரா?
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார். இதற்காகத் தானே இத்தனை நாள் காத்திருந்தேன் என்பதைப் போல அந்தப் பாடலை மேலும் மேலும் ரசித்து உருவாக்கி இருப்பார். இயக்குநர் சிகரம் இந்தப் பாடலை படத்தில் தான் கதாநாயகிக்கு சவாலாலகக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் உண்மையிலேயே இந்த சவால் கொடுக்கப்பட்டது இளையராஜாவுக்குத் தான். அவர் அதில் ஜெயித்துக் காட்டி தான் ஒரு இசைஞானி என்று நிரூபித்துள்ளார் என்பது தான் உண்மை. அதனால் தான் அவருக்கு இந்தப் பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது.
1985ல் பாலசந்தரின் இயக்கத்தில் வந்த படம் சிந்து பைரவி. சிவக்குமார், சுஹாசினி உள்பட பலர் நடித்துள்ளனர். அந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் தான் பாடறியேன் படிப்பறியேன் பாடல் வருகிறது. படத்தில் உள்ள அத்தனை பாடல்களிலும் இளையராஜா தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி இருப்பார். எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.