விரைவில் தொடங்குகிறது கைதி - 2: மாஸ் அப்டேட்!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் 'கைதி'. கதாநாயகி, பாடல்கள் என ஏதும் இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாகக்கொண்டு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியையடுத்து லோகேஷ் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். ஆனால் இப்படம், கைதி படம் அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.
இதையடுத்து லோகேஷ் தற்போது கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசிலை வைத்து 'விக்ரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டநிலையில் தற்போது அவர் விக்ரம் படத்தை முடித்துவிட்டு 'கைதி 2' படத்தை இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
விஜய் 'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதால் விஜய் அப்படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் லோகேஷ் 'கைதி-2' படத்தை முடிக்க உள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.