எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுத திணறிய வாலி.. அம்சமா வரி சொன்ன கருணாநிதி.. இது செம மேட்டரு!..
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் அரசியலில்தான் எதிரிகளாக இருந்தனர். ஆனால், திரையுலகில் இருவரும் வளரும்போது நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு அசத்தலான வசனங்களை கருணாநிதி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் நடிகராகவும், கருணாநிதி கதை, வசனகர்த்தா-ஆகவும் ஒன்றாகவே வளர்ந்தனர்.
அறிஞர் அண்ணா மீது இருவருமே பற்று வைத்திருந்தனர். அதனால்தான், எம்.ஜி.ஆர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். ஆனால், சில பிரச்சனைகளால் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க வேண்டிய சூழ்நிலை வந்தது. எம்.ஜி.ஆர். முதல்வராகவும், கருணாநிதி எதிர்கட்சி தலைவராகவும் இருந்த போது கூட சட்டமன்றத்தில் கருணாநிதிக்கு உரிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
சரி விஷயத்திற்கு வருவோம். எம்.ஜி.ஆருக்கு பல அசத்தலான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்துக்காக அவர் பாட்டு எழுதும்போது நடந்த சம்பவத்தை கவிஞர் வாலி ஒரு மேடையில் கூறியிருந்தார்.
கிருஷ்ணன் பஞ்சு இயக்குனர்.. எம்.ஜி.ஆர் ஹீரோ.. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படம். அப்படத்தின் கதாநாயகி ஜெயலலிதா. அப்படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் பாடல். முதல் வரியை எம்.எஸ்.விஸ்வநாதனே சொன்னார். ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்பதுதான் முதல் வரி. அடுத்த வரியிலிருந்து நான் எழுத வேண்டும். ஆனால், எனக்கு எதுவும் தோன்றவில்லை. எனவே, வெத்தலை பாக்கை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தேன்.
அப்போது கலைஞர் கருணாநிதி அங்கே வந்தார். ‘என்னய்யா வாலி பாட்டு எழுதியாச்சா?’ என கேட்டார். நான் முதல் வரி ‘நான் அளவோடு ரசிப்பவன்’.. அடுத்தவரி எனக்கு வரவில்லை என்றேன். உடனே ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என சொன்னார் கலைஞர். நான் அசந்துபோய் விட்டேன். எம்.ஜி.ஆருக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல் வரி இது. அதன்பின் எம்.ஜி.ஆரை நான் சந்தித்த போது அவர் அந்த பாடல் வரிக்காக என்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். உடனே நான் ‘அந்த வரிக்கு முத்தம் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் கருணாநிதிக்குதான் கொடுக்க வேண்டும்’ என்றேன்.
இப்படி ஒரு சுவாரஸ்யமான செய்தியை அந்த மேடையில் வாலி பகிர்ந்து கொண்டார்.