இதை எந்தப்படத்திலோ பார்த்தா மாதிரி இருக்கே...! யோசிக்க வைத்த அந்த சில படங்கள்...!!!

by sankaran v |   ( Updated:2023-01-12 16:49:52  )
இதை எந்தப்படத்திலோ பார்த்தா மாதிரி இருக்கே...! யோசிக்க வைத்த அந்த சில படங்கள்...!!!
X

Dasavatharam

அந்தப்படம் எங்கிருந்ததாக இருக்கும் என்று சில படங்களைப் பார்க்கும் போது நமக்கு யோசிக்கத் தோன்றும். அந்தப் படத்தின் கதையோ அல்லது முக்கியக் கேரக்டர்களோ தான் அப்படி யோசிக்க வைக்கும். அது போன்ற படங்களையும் இந்தப் படங்கள் அமைய காரணமாக இருந்த படங்களையும் பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழ்ப்படங்களில் தற்போதெல்லாம் பாகம் 1, 2, 3 என வர ஆரம்பித்து விட்டன. இந்தப் படங்களின் சுவாரசியங்கள் தான் நம்மை அடுத்தும் இதன் பாகம் உண்டா என கேட்க வைக்கின்றன. அதற்கேற்ப இயக்குனரும், தயாரிப்பாளரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களை எடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

ஒரு படத்தின் தொடர்ச்சியாக அடுத்த படத்தின் கதைக்களம் அமைந்தால் அதை அத்தியாயம் 1, அத்தியாயம் 2 என சொல்வார்கள்.

ஒரு படத்தில் வந்த ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து அதை டெவலப் செய்து அடுத்த படமாக எடுத்தால் அதை ஸ்பின் ஆஃப் மூவீஸ் என்பர்.

இந்த வகையில் ஹாலிவுட்டில் ஹாப்ஸ் அண்ட் ஷாவ், லோகன், ஜோக்கர் என பல படங்கள் வெளியாகி உள்ளன.

தமிழிலும் அதே போல உருவாகி வரும் ஒரு படம் தான் சபாஷ் நாயுடு. இந்தப் படத்தின் கதாபாத்திரம் தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

பொதுவாக கமல் பெரிய பெரிய முயற்சிகள் செய்து படங்களை எடுத்து வெற்றி பெறுவார். அதற்கு காரணகர்த்தாவாக அமைந்தது அவரது சின்ன சின்ன முயற்சிகள் தான். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தசாவதாரம்

தசாவதாரம் கதை எழுத அவருக்கு முன்மாதிரியாக இருந்தவைகள் எல்லாம் இன்பமயம் என்ற படம். அந்தப் படத்தில் இவர் நடித்த பாடல் ஒன்று முக்கியக் காரணம். இந்தப் பாடலில் அவர் 8 வித்தியாசமான கெட்டப் போட்டு நடித்து அசத்தியிருப்பார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக 10 கதாபாத்திரத்தில் படம் எடுக்கலாம் என முடிவெடுத்து எழுதிய கதை தான் தசாவதாரம்.

இந்தப் படத்தில் கயாஸ் தியரியை பெரிய அளவில் பயன்படுத்தி இருப்பார். இதற்கு முன்னரே அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு சண்டை காட்சியில் இதனை பயன்படுத்தியிருப்பார் கமல்.

அபூர்வ சகோதரர்கள்

Apoorvasagotharargal

இந்தப் படத்தில் கமல் குட்டையானவராக நடித்து இருப்பார். இந்தக் கதைக்களம் எழுத அவருக்கு முன்மாதிரியாக இருந்தது அவர் ஏற்கனவே நடித்த புன்னகை மன்னன் தான்.

Punnagai Mannan

இந்தப் படத்தில் அவரது சாப்ளின் செல்லப்பா கதாபாத்திரத்தில் ஒரு சமயம் குள்ளமாக நடித்து அசத்தியிருப்பார். இது ஒரு காமெடி காட்சி. இதே கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழுநீள படம் எடுக்கலாமே என யோசித்த போது உருவான படம் தான் அபூர்வ சகோதரர்கள்.

நாயகன்

மணிரத்னம் இயக்கிய நாயகன் உருவாக காட்பாதர் அல்லது வரதராஜ முதலியார் தான் காரணம் என்று சொல்வார்கள்.

ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைக்க உதவியது இதற்கு முன்னால் மணிரத்னம் இயக்கிய பகல்நிலவு படம் தான் காரணம். இந்தப் படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரத்தின் நீட்சி தான் நாயகன் கமல்.

மங்காத்தா

Mankatha

அல்டிமேட் ஸ்டார் தல அஜீத் நடித்த மங்காத்தா படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப்படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குப் புரிய வரும்.

இதற்கு முன் இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய படம் சரோஜா. இந்தப்படத்தைப் பார்த்தவர்களால் மங்காத்தா படத்தின் கிளைமாக்ஸை ஈசியாகக் கணித்து விட முடியும். எப்படி என்கிறீர்களா?

பணத்துக்காக போலீஸ்காரன் குறுக்கு வழியில் செல்வான் என சரோஜா படத்தில் சொல்லியிருப்பார். அதே போல் தான் மங்காத்தாவும். அந்தப் போலீஸ் கதாபாத்திரத்தின் நீட்சி தான் மங்காத்தா.

Next Story