Cinema History
சண்டை காட்சிகளில் முதல் முறையாக புதிய யுக்தியை கொண்டு வந்த கமல் படம்!.. அட அந்த படமா?!…
80களில் வந்த பெரும்பாலான படங்களில் சண்டைக்காட்சிகள் என்றால் டிஷ்யூம், ஹூயா… கியா… கியா என்று தான் பின்னணியில் சப்தங்கள் கேட்கும். இது மட்டுமல்லாமல் ஒருவர் அடித்தால் 10 பேர் காற்றில் பறப்பார்கள். இது சினிமாவுக்காகத்தான் என்றாலும் ஒரே மாதிரியாகப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும்.
அந்தக்குறையைப் போக்க வந்தது ஒரு கமல் படம். தமிழ்த்திரை உலகில் பல பரீட்சார்த்தமான முயற்சிகளைக் கையாள்வதே கமல் படம் தான். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. என்ன படத்தில் ரியலான சண்டைக்காட்சிகள் முதன் முதலாக வந்தன என்று பார்ப்போம்.
1988ல் வெளியான படம் சத்யா. கமல் ரசிகர்களுக்கு ரொம்பவே ஒரு உத்வேகத்தைத் தந்த படம் இதுதான். படத்தின் அபார வெற்றிக்கு முக்கிய காரணம் பின்னணி இசை. அதுவும் சண்டைக்காட்சிகள் ரியலாக நடப்பது போலவே இருக்கும். படத்தில் வரும் மார்க்கெட் சண்டையை சாம்பிளுக்காகச் சொல்லலாம்.
அடியாள்கள் காரில் இருந்து இறங்கி வந்து தெருமுனையில் நிற்பார்கள். நாலு பேர் கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை, உருட்டுக்கட்டை சகிதம் வந்து மிரட்டும் விதத்தில் போஸ் கொடுத்தபடி நிற்பார்கள். அங்கிருந்த படி கமலிடம் பேரு என்னன்னு கேட்பார்கள். சத்யாடான்னு கமல் தெனாவெட்டாக சொல்வார்.
அவர்கள் கோபம் கொப்பளிக்க முன்னால் வேகமாக வருவார்கள். அதற்குள் கமல் ஒரு ஆட்டோவில் ஓடி ஏறி ஒரு வேனுக்குத் தாவி தன்னைத் தேடிக்கொண்டு இருக்கும் அடியாள் மீது பாய்ந்து விழுவார். அப்படித் தான் சண்டை புது கோணத்தில் படம்பிடிக்கப்பட்டு இருக்கும். தமிழ்ப்படங்களில் பாவ் (POV) முறையில் அமைக்கப்பட்ட முதல் சண்டைக்காட்சி இதுவாகத்தான் இருக்கும்.
அதென்ன பாவ் என்கிறீர்களா? வேற ஒண்ணுமில்ல. கமலின் பின்னால் இருந்து நாம் சண்டைக்காட்சியை ரசிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல் சண்டையின்போது உருட்டுக்கட்டை அடி, கையால் குத்தும் விதம் எல்லாமே நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அடியாள் ஒருவரை மாடிப்படிகளில் தரதரவென கமல் இழுத்து வருவார். அந்த சமயத்தில் அதுபோன்ற காட்சிகள் எல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமை விருந்தைப் படைத்தது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா என்பது குறிப்பிடத்தக்கது.