விஜய்சேதுபதி சினிமாவின் நேசன்...அவர் முன் மண்டியிட்டு முத்தம் கொடுக்க ஒரு நடிகன் வருவான்...கமல் புகழாரம்!
விஜய்சேதுபதி நடிப்பில் உருவான டிஎஸ்பி படத்திற்கான டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
இங்கு அன்பின் காரணமாக நடக்கும் விழா. இதுக்கு வர்றேன்னு சொல்லிருந்தேன். இவரு சொல்லிட்டு ஆஸ்பத்திரில போயி படுத்துக்கிட்டாரேன்னு சொல்லிடுவாங்களோன்னு.
நான் செக்அப்க்கு தான் போயிருந்தேன். முந்தியெல்லாம் முதுகுத்தண்டு உடைஞ்சி கால் உடைஞ்சி கிடந்தாலே எப்ப சூட்டிங் வர்றீங்கன்னு கேட்பாங்க. அதுக்கு மேல பேச்சு இருக்காது. இப்ப ஊடகங்கள்லாம் வளர்ந்துருச்சு.
அன்பும் பெருகியிருக்குறதுனால சின்ன இருமல் வந்தா கூட பெரிய செய்தியா வருது. அவ்ளோதான். உங்கள் அன்பு இருக்கும் வரை எனது ஆரோக்கியம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படித்தான் பல விபத்துகளில் இருந்தும் உங்கள் அன்பு என்னைத் தேற்றி எடுத்திருக்கிறது.
இப்போ இங்கே நான் வந்ததுக்கான காரணம் இந்த நபர் விஜய்சேதுபதி என்பவர் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்ட சக நடிகர் என்பதால் மட்டுமல்ல.
நான் இங்கு வந்ததற்கான காரணம் என்னைப்போலவே அவர் சினிமாவின் நேசன். அதுக்கு தலைமுறை... வயது இதெல்லாம் கிடையாது. அந்த அளவுக்கு சினிமாவை நேசித்தால் சினிமா வாழும். சினிமா வளரும். அத்தனை தலைமுறைகளும் வாழும்.
இந்தி திரையுலகில் உள்ள திலீப்குமார் யாருன்னு எனக்குத் தெரியாது. ஏக் துஜே கேலியே என்ற படம் நடிக்கப் போகும்போது ஜாவே தத்தர் என்ற மாபெரும் எழுத்தாளர் உங்களை சாகர் என்ற படத்தில் போடலாம்னு இருக்கோம்.
இந்தப் படம் கிட்டத்தட்ட கங்கா ஜமுனா இல்ல...அப்படி இருக்கும். கங்கா ஜமுனான்னான்னு கேட்டேன். அந்தப்படம் நான் பார்த்ததில்லை. அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் இந்திப்படம் இங்கே வராது.
அந்தப்படத்தை வீடியோவில் போட்டுப் பார்த்தேன். அப்போது எனக்கு ஒரு புதிய உலகம் கண்ணுக்குத் தெரிந்தது. எப்படி விஞ்ஞானிகளுக்கு விண்ணுலகம் டெலஸ்கோப்ல பார்க்கும்போது தெரிஞ்சதோ அதே போல நான் பார்த்தால் இதை விட இன்னும் பெரிய உலகம் எல்லாம் இருக்கு என்பது தெரிந்தது.
எப்படி மர்லின் பிரான்டாவோ அந்த மாதிரி திலீப் குமார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவரை நான் புரிந்து கொண்ட வருடம் 1982. அவர் நடிக்க வந்தது 1947. அதன்பிறகு வருடா வருடம் அவர் பிறந்த நாளன்று ரகசியமாக அவர் வீட்டுக்குச் சென்று மண்டியிட்டு அவர் கையை முத்தம் கொடுப்பேன். இது ஒரு அற்புதமான சுழற்சி என்று சொல்வார்கள்.
என் தம்பி அதே மரியாதையை எனக்குக் கொடுப்பது அடுத்தத் தலைமுறை கற்க வேண்டும் என்பது தான். இவருக்கு முன்னால் மண்டியிட ஒரு நடிகன் வருவான். அது இவருக்கு சிறப்பு அல்ல. இவரைப் புரிந்து கொண்ட சிறப்பு அந்த நடிகனுக்கு.
இது தொடரும். தொடர வேண்டும். அந்தத் தொடர்ச்சி...அந்த நீட்சியின் காரணமாகத் தான் நானே இங்கு வந்திருக்கிறேன். இந்தவிழாவில் இவர்கள் எல்லோரும் சிறப்பாக சின்னதாக ஆரம்பித்து பெரிதாக விஸ்வரூபம் எடுத்தவர்கள். இவர்கள் அனைவருக்குமே எனது வாழ்த்துகள்.