ஜோசியம் பார்க்க வந்த பெண்ணுக்கே ஜோசியம் பார்த்த கமல்… “சொன்னது எல்லாமே உண்மை”… ஆச்சரியமா இருக்கே!!
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஆன்மீகம், கடவுள் போன்ற விஷயங்களில் ஈடுபாடு இருந்ததில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன். இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொன்னேன்” என்ற தசாவதாரம் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை நம்மால் மறந்திருக்க முடியாது.
கமல்ஹாசன் நடித்த “அன்பே சிவம்”, “வசூல்ராஜா”, “ஹே ராம்” போன்ற பல திரைப்படங்களில் கடவுள் நம்பிக்கை குறித்த அவரது பாணியிலான வசனங்கள் பல இடம்பெற்றிருக்கும். சில வசனங்கள் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு.
கமல்ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை என்னும்போது, ஜோசியம் மீதெல்லாம் நம்பிக்கை இருக்குமா? கமல்ஹாசனுக்கு ஜோசியம், நியூமராலஜி போன்ற எந்த விஷயங்களின் மேல் என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு ஒரு பெண்மணி வந்தார். அப்போது அவர் கமல்ஹாசனிடம் வந்து “எனக்கு கைரேகை படிக்கும் வல்லமை உண்டு. உங்களது கையை காட்டுங்கள். உங்கள் எதிர்காலத்தை சொல்கிறேன்” என கூறினாராம்.
அதற்கு கமல்ஹாசன் “எனக்கு இது போன்ற விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை” என கூறியிருக்கிறார். ஆனால் அந்த பெண்மணி அவரை விடுவதாக இல்லை. உடனே கமல்ஹாசன் “நீங்கள் எனக்கு ஜோசியம் சொல்வதற்கு முன்பு, நான் உங்களுக்கு ஜோசியம் சொல்லட்டுமா?” என கேட்டிருக்கிறார்.
அதற்கு அப்பெண்மணி “சரி” என்று சொல்லி கையை நீட்டினாராம். அப்பெண்மணியின் கையை பார்த்த கமல்ஹாசன் “நீங்கள் ஜோசியம் பார்ப்பது என்பது இராண்டாவதுதான். ஆனால் நீங்கள் ஒரு வங்கியில் வேலை செய்கிறீர்கள். சரியா?” என்று கேட்டிருக்கிறார். இதை கேட்ட அந்த பெண் “எப்படி சரியாக சொன்னீர்கள்?” என ஆச்சரியப்பட்டாராம்.
மேலும் கமல்ஹாசன் “நீங்கள் மட்டுமல்ல, உங்கள் கணவரும் அந்த வங்கியில்தான் வேலை செய்கிறார்” என கூறினார். அப்பெண் “ஆமாம், இதுவும் சரிதான். நான் கூட இவ்வளவு துள்ளியமாக ஜோசியம் சொன்னதில்லை. எப்படி கண்டுபிடித்தீர்கள்?” என கண்களில் வியப்போடு கேட்டிருக்கிறார்.
அதற்கு கமல்ஹாசன் “இவ்வளவு துள்ளியமாக பதில் சொல்லவேண்டும் என்றால், நமது காதுகளை நன்றாக திறந்துவைத்துக்கொண்டால் போதும். நீங்கள் இங்கே வந்தபோது, ஒரு அரை மணிநேரம் ஒருவருடன் இந்த விஷயங்களை எல்லாம் பேசினீர்கள். அதை நான் கேட்டேன். அதை வைத்துத்தான் நான் ஜோசியம் சொன்னேன்” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட அப்பெண்மணியின் முகத்தில் இருந்த ஆச்சரியம் காணாமல் போனதாம்.