Cinema News
தேவர் மகன் கதையை இப்படித்தான் எழுதினேன்!.. கமல் சொன்ன பதிலை பாருங்க!..
களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக அறிமுகமான கமல் அதன்பின் பாலச்சந்தரால் சினிமாவில் வளர்த்தெடுக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். படத்தின் வெற்றிக்காக கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் கலை படங்களே கமலின் கனவாக இருந்தது.
அதனால்தான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தபோதே ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களில் நடித்தார். தனது நூறாவது படமாக ராஜபார்வை படத்தை தேர்ந்தெடுத்தார். சகலகலா வல்லவன் போல கமர்ஷியல் ஹிட் படங்களை அவரால் கொடுக்க முடியும் என்றாலும் அவரின் தாகம் என்னவோ கலைப்படங்களின் மேலேயே இருந்தது.
அதனால்தான் பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா, மகாநதி, தேவர் மகன், ஹே ராம், தசாவதாரம் போன்ற படங்களை அவர் எடுத்தார். வழக்கமான மசாலா சினிமாவாக இல்லாமல் நல்ல கதைகளில், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள அழுத்தமான வேடங்களில் நடிப்பதே அவரின் ஆசையாக இருக்கிறது.
கமலின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான திரைப்படம்தான் தேவர் மகன். இந்த படத்தில் கமலின் அப்பாவாக நடிகர் திலகம் சிவாஜி நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வெளிவந்த முக்கியமான படங்களில் தேவர் மகனும் ஒன்று. இப்படத்தின் திரைக்கதையை இப்போதும் பல இயக்குனர்கள் சிலாகித்து பேசுகிறார்கள்.
இந்நிலையில், இந்தியன் 2 டிரெய்லர் வீடியோவை வெளியிடும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில், கமல், ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்க, கமலும் அதற்கு பதில் சொன்னார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ‘தேவர் மகன் படத்தை எப்படி எழுதினீர்கள்?’ என கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன கமல் ‘தேவர் மகன் எழுதும்போது சிவாஜியை நினைத்துக்கொண்டேன். என் சொந்த ஊரை நினைத்துக்கொண்டேன். என்னை நினைத்துக்கொண்டேன், தேவர்மகன் படத்தின் கதையை ஏழு நாட்களில் எழுதி முடித்தேன்’ என பதில் சொல்லி இருக்கிறார்.
இப்போதுள்ள இயக்குனர்கள் ஒரு படத்தின் கதையை எழுத மாதக்கணக்கில் எடுத்துகொள்ளும் நிலையில் தேவர் மகன் கதையை கமல் ஏழு நாட்களில் எழுதி முடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யம்தான். இப்போதுள்ள இயக்குனர்கள் கமலிடம் பாடம் கற்க வேண்டும் என கமல் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.